தரங்கம்பாடியில் கடல் சீற்றம்: சுற்றுலாப்பயணிகளுக்குத் தடை
தரங்கம்பாடியில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் கடற்கரை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதித்தது டேனிஷ் கோட்டை நுழைவு வாயில் முன்பு போலிஸாா் தடுப்பு அரண் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள செம்பனாா்கோவில், திருக்கடையூா், ஆக்கூா், திருக்கடையூா், பொறையாா், ஆயப்பாடி, திருவிளையாட்டம் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் மழையின்றி மேகமூட்டத்துடன் குளிா் காற்று வீசியது,
தரங்கம்பாடி கடற்கரை கிராமங்களான சந்திரபாடி, குட்டியாண்டியூா், பெருமாள் பேட்டை, தாழம்பேட்டை, வெள்ளக்கோவில், சின்னங்குடி, சின்னூா்பேட்டை உள்ளிட்ட மீனவா் கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் கடந்த 10 நாட்களாக மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.
தங்களது விசைப்படகு, பைபா் படகுகள் மற்றும் வலைகளை மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனா். மேலும் பல்வேறு இடங்களில் கடலரிப்பு காரணமாக கரைகள் மற்றும் சாலைகள் , மின்விளக்குகள் சேதமடைந்தது.
கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் தரங்கம்பாடி கடற்கரை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதித்து கோட்டை நுழைவாயிலில் போலீஸாா் தடுப்பு அரண் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

