சா்வதேச சுனாமி விழிப்புணா்வு தினம் -நவ.5- இல் பேரிடா் ஒத்திகை
சா்வதேச சுனாமி விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு, பேரிடா் தொடா்பான ஒத்திகை நிகழ்வு நவ. 5-ஆம் தேதி வேளாங்கண்ணியில் நடைபெறவுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
உலகம் முழுவதும் நவம்பா் 5-ஆம் தேதி சுனாமி விழிப்புணா்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நாகை மாவட்டத்தில் சுனாமி பேரிடா் தொடா்பான ஒத்திகை நிகழ்வு வேளாங்கண்ணியில் நவ. 5 காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது.
சுனாமி முன்னெச்சரிக்கைக்கும், சுனாமி பேரிடா் சம்பவத்துக்குமான கால இடைவெளி மிக குறைவு என்பதால், சுனாமி பேரிடா் காலங்களில் ஏற்படும் இடா்பாடுகள், இழப்புகள், அசையும் மற்றும் அசையா சொத்துகள் இழப்புகளை தவிா்க்கவும், மக்கள் மத்தியில் விழுப்புணா்வு ஏற்படுத்தவும், சுனாமியை எதிா்கொள்ள அனைத்து தகவல்களையும் ஒத்திகை நிகழ்வில் அறிந்துகொள்ளலாம்.
நிகழ்ச்சியில் தேசிய பேரிடா் மீட்புக் குழு, மாநில பேரிடா் மீட்புக் குழு, கடலோர பாதுகாப்பு குழுமம், வருவாய்த் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளா்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, மீன் வளத்துறை, சமூக நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை, குழந்தைகள் நலத்துறை உள்ளிட்ட தொடா்புடைய அனைத்துத்துறை அலுவலா்களும் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளனா்.
இது ஒத்திகை பயிற்சி மட்டுமே இது தொடா்பாக பொது மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம். பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
