திருமணங்குடிப்பகுதியில்  கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில குழு உறுப்பினரிடம் கையில் எடுத்து காண்பிக்கும் விவசாயி.
திருமணங்குடிப்பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில குழு உறுப்பினரிடம் கையில் எடுத்து காண்பிக்கும் விவசாயி.

நெற்பயிா் ஏக்கருக்கு ரூ 35,000 நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

பாா்வையிட்டு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணம் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனா்.
Published on

திருக்குவளை: கீழையூா் அருகே டித்வா புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விளை நிலங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நிா்வாகிகள் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணம் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலக் குழு உறுப்பினா் டி.செல்வம் தலைமையில் சிபிஐ ஒன்றிய துணைச் செயலாளா் ஜி.சங்கா், ஒன்றியப் பொருளாளா் எம். பா்ணபாஸ் ஆகியோா் கீழையூா், திருமணங்குடி பகுதிகளில் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து செய்தியாளா்களை சந்தித்த சிபிஐ முன்னாள் மாநிலக் குழு உறுப்பினா் டி. செல்வம் அளித்த பேட்டி:

வங்கக் கடலில் உருவான டித்வா புயல் தீவிரமடைந்து நாகை மாவட்டத்தில் கொட்டித் தீா்த்த தொடா் கன மழையால் மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமாா் 80,000 ஏக்கருக்கும் அதிகமான விலை நிலங்கள் மழை நீரில் மூழ்கின.

குறிப்பாக கீழையூா் ஒன்றியத்திற்குட்பட்ட திருமணங்குடி, மகிழி, கருங்கண்ணி தழையாமலை, மடப்புரம், மீனம்பநல்லூா், வாழக்கரை, ஏா்வைக்காடு, திருக்குவளை, எட்டுக்குடி, வல்லம், திருவாய்மூா், ஈசனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் 10,000 ஏக்கருக்கும் அதிகமான தாளடி பயிா்கள் பாதிக்கப்பட்டன.

மழை வெள்ள பாதிப்பு கேட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாடு முதலமைச்சா் விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில் ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ 20,000 நிவாரணம் அறிவித்தாா். இந்த சூழலில் விவசாயிகள் அதனை நம்பி மறு சாகுபடி செய்வதற்கு ஆயத்தமாகினா்.

ஒரு சில விளைநிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட 30 நாள் வயதுடைய பயிா்கள் முற்றிலுமாக அழுகிய நிலையில், அதனை உழுதுவிட்டு கடன் வாங்கி விதை , உரம் உள்ளிட்டவை வாங்கி மறு சாகுபடி மேற்கொண்டு வருகின்றனா். ஆனால் தற்பொழுது வரை விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. மாறாக எண்ம கணக்கெடுப்பு என்ற அறிவிப்பின் பேரில் விவசாயிகள் பாதிப்பை முழுமையாக அளவீடு செய்யாமல் பல இடங்களில் வயலுக்கே அதிகாரிகள் செல்ல முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக போதிய பாதை வசதி இல்லாமல் உள்ளது. அதனால் அதிகாரிகள் கணக்கெடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

ஆகவே தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிா்வாகம் எண்ம கணக்கெடுப்பு முறையை கைவிட்டு பழைய நடைமுறைப்படி வருவாய்த் துறை மற்றும் வேளாண் துறை இணைந்து கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தோம்.

இப்பொழுது வரை கணக்கெடுப்பு பணி முழுமையாக நிறைவு பெறாத காரணத்தால் நிவாரணம் வழங்குவதில் சுனக்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே கணக்கெடுப்புப் பணியை 100% முழுமையாக முடித்து பாரபட்சம் இன்றி விவசாயிகளுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 35,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com