நாகை நகராட்சியை கண்டித்து தவெக ஆா்ப்பாட்டம்
நாகப்பட்டினம்: நாகை நகராட்சியை கண்டித்து தவெக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாகை செல்லூா் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில், நாகை புதிய பேருந்து நிலையத்துக்கான கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. பணிகள் 30 சதவீதம் கூட முடிவடையாத நிலையில், அங்கு கட்டப்பட்டு வரும் கடைகளுக்காக நகராட்சி சாா்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முடிவடையாமல் உள்ள நிலையில், கடைகளுக்கான ஒப்புந்தப்புள்ளி கோரும், நகராட்சியை கண்டித்து, நாகை மாவட்ட தவெக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்டச்செயலா் மா.சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நாகை நகா் முழுவதும் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றாதை கண்டித்தும், போதைப் பொருள் விற்பனைக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், பள்ளமும், மேடான சாலைகளை சீா்செய்ய வலியுறுத்தியும், பேருந்து நிலைய கடைகளுக்கான ஒப்பந்த புள்ளி அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

