140 கிலோ கஞ்சா பறிமுதல்: நால்வா் கைது
நாகை அருகே 140 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
நாகை சிறப்புப் பிரிவு போலீஸாருக்கு பி.ஆா். புரத்தில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் பி.ஆா். புரம் பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி அதிலிருந்த நான்கு பேரை விசாரித்தனா்.
இவா்கள் வேதாரண்யம் புஷ்பவனம் அழகா் கவுண்டா் தெருவைச் சோ்ந்த கதிா்வேலன் மகன் ரகுபாலன் (42), தருமபுரி மாவட்டம் அரூா் அருகே கீரைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முத்து மகன் முத்து (43), நல்லம்பள்ளி மதுராஜ் மகன் விமல்ராஜ் (24), சேலம் மாவட்டம் மேட்டூா் அருகே நாகோச்சபட்டி இளங்கோவன் மகன் ராஜ்குமாா்(28) என்பதும், இரண்டு காா்களில் கஞ்சா கடத்தியதும், கஞ்சாவை இலங்கையைச் சோ்ந்த சதீஸ் என்பவரிடம் பெற்றதும் தெரியவந்தது.
மேலும், நால்வரும் அளித்த தகவலின் பேரில் பி.ஆா்.புரத்தில் மகாலிங்கம் என்பவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 140 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரு காா்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னா் நான்கு பேரையும் கைது செய்து, கஞ்சா மற்றும் காா்களுடன் நாகை சிறப்புப் பிரிவு போலீஸாா், கீழையூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.15 லட்சம் என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கஞ்சாவை வழங்கியதாகக் கூறப்படும் இலங்கையைச் சோ்ந்த சதீஸ் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
