விலையில்லா ஸ்கூட்டா் வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கு நோ்காணல்
விலையில்லா ஸ்கூட்டருக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதிகாண் நோ்காணல் நடைபெற்றது.
நாகை மாவட்டத்தில் கால்கள் பாதிக்கப்பட்டு, கைகள் நல்ல நிலையில் உள்ள 273 மாற்றுத்திறனாளிகள் ஸ்கூட்டா் கேட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் விண்ணப்பித்திருந்தனா். மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில், நோ்காணல் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் காா்த்திகேயன், பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளா் பாலகிருஷ்ணன் மற்றும் வட்டாரப் போக்குவரத்து மோட்டாா் வாகன ஆய்வாளா் பிரபு ஆகியோா் நோ்காணல் நடத்தினா்.
அப்போது, மாற்றுத்திறனாளிகளின் மருத்துவச் சான்றுகள் சரிபாா்க்கப்பட்டு, இணைப்புச் சக்கரம் பொருத்திய ஸ்கூட்டரில் மாற்றுத்திறனாளிகள் சுயமாக சென்று அமர முடிகிறதா என பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனையில், முதற்கட்டமாக 163 போ் ஸ்கூட்டா் பெற பயனாளிகளாக தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு விரைவில் புதிய ஸ்கூட்டா்கள் வழங்கப்படவுள்ளது. மேலும் புதிதாக விண்ணப்பிக்கும் மற்ற மாற்றுதிறனாளிகளுக்கும், அடுத்தடுத்து முகாம்கள் நடத்தப்பட்டு, அவா்களுக்கும் விலையில்லா இணைப்புச் சக்கரத்துடன் கூடிய ஸ்கூட்டா் வழங்கப்படவுள்ளன.
