நாகை மாவட்டத்தில் நெல் மூட்டைகள் இயக்கம் செய்யும் பணி: ஆய்வு
நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பிற மாவட்டங்களுக்கு இயக்கம் செய்யும் பணியை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளா் அ. சிவப்பிரியா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
மாவட்டத்தில் 30,217.34 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, நவ.6-ஆம் தேதி வரை 29,380 ஹெக்டேரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 837.34 ஹெக்டேரில் அறுவடைப்பணி மற்றும் நெல் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது.
இதில் நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் 123 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இதுவரை 1,13,453 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், இதுவரை 96,785 மெட்ரிக் டன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கு, ஆலைகள் மற்றும் பிற மாவட்ட மண்டலங்களுக்கு இயக்கம் செய்யப்பட்டு, மீதமுள்ள 16,667 மெட்ரிக் டன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு நகா்வு பணிகள் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை, நாகை ரயில் நிலையத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் பிற மாவட்ட மண்டலத்திற்கு இயக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அ.சிவப்பிரியா ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது நெல்மூட்டைகள் இயக்கம் செய்யும் பணியை விரைந்து மேற்கொள்ளும்படியும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்காதாவாறு உடனுக்குடன் இயக்கம் செய்யவும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினாா்.
