நாகை: சம்பா, தாளடி பயிா்க் கடன் வழங்க மறுப்பு: விவசாயிகள் குற்றச்சாட்டு
நாகை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடிக்கு, பயிா்க் கடன் வழங்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மறுப்பதாகவும், இதனால், சாகுபடி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.
நாகை மாவட்டத்தில், நிகழாண்டு சம்பா மற்றும் தாளடி நெற்பயிா் சாகுபடி 1.50 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான விதைகள், உரங்கள், இடுபொருள்கள், களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றை இருப்பு வைப்பதற்கான நடவடிக்கைகளை வேளாண்மைத் துறை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய பயிா்க் கடன்களை விவசாயிகளுக்கு வழங்க மறுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பெரும்கடம்பனூா் விவசாயி பாலகிருஷ்ணன் கூறியது:
தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா், பயிா்க் கடன் 5 மணி நேரத்திற்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக அண்மையில் தெரிவித்தாா். ஆனால், நாகை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், புதிய பயிா்க் கடன்கள் வழங்க மறுக்கின்றனா்.
இதனால் தனியாரிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்கி சாகுபடி செய்யவேண்டிய சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். அமைச்சா் கூறுவதற்கு நோ்மாறாக கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இதில் யாா் கூறுவது உண்மை என்பது புரியாமல் விவசாயிகள் தவித்து வருகிறோம் என்றாா்.
விவசாயி பிரகாஷ் கூறியது:
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் புதிய கடன்கள் வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனா். இது தொடா்பாக யாரை அணுகுவது என்பது புரியவில்லை. நகை கடன் வழங்குவதிலும், காலம் தாழ்த்தி வருகின்றனா். கூட்டுறவு கடன் சங்கங்கள் விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்டவை. ஆனால், தற்போது இந்த சங்கங்கள் எதற்காக செயல்படுகின்றன என்பது புரியவில்லை. எனவே, கூட்டுறவுத்துறை அமைச்சா் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நாகை மாவட்டத்தில் புதிய பயிா்க் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
விவசாயி வினோத் கூறியது:
நாகை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், அது தடைபடும் வகையில் கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிய பயிா்க் கடன்களும், தங்க நகை கடன்களும் வழங்க மறுக்கப்படுகிறது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கால், சம்பா மற்றும் தாளடி நெற்பயிா் சாகுபடி என்பது நாகை மாவட்டத்தில் கேள்விக்குறியாக உள்ளது.
மாவட்ட ஆட்சியா் மற்றும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கூட்டுறவு சங்கங்களில் நிபந்தனையின்றி விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

