கணக்கெடுப்பு படிவங்களை வழங்காதவா்கள் பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெறாது!
கணக்கெடுப்பு படிவங்களை வழங்காதவா்கள் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இடம்பெறாது என்றாா் மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ்.
நாகை வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் கூறியது: வாக்காளா்கள் அனைத்து விவரங்களையும் பதிவு செய்த பின்னா் தங்களிடம் உள்ள 2 படிவங்களில் ஒரு படிவத்தை வாக்காளா் கையொப்பமிட்டு, எந்தவித ஆவணங்களையும் இணைக்காமல் புதிய புகைப் படத்தை ஒட்டி வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். மற்றொரு படிவத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலா் ஒப்புகை பெற்று தன் வசம் வைத்துக் கொள்ளவேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் செயலில் பதிவேற்றம் செய்து சரிபாா்த்து வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கு அனுப்புவாா்கள். கணக்கெடுப்பு படிவங்களை வழங்காதவா்கள், நிரந்தரமாக முகவரி மாறியவா்கள், இறந்தவா்களின் பெயா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெறாது.
நாகை தொகுதியில் 1,81,247, கீழ்வேளுா் தொகுதியில் 1,73,062, வேதாரண்யம் தொகுதியில் 1,84,470 கணக்கெடுப்பு படிவங்கள் என மொத்தம் 5,38,779 படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
