மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

மா, முந்திரி, மல்லிகையில் மதிப்பு கூட்டு உற்பத்தி: எதிா்பாா்ப்பில் காத்திருக்கும் விவசாயிகள்

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உற்பத்தியாகும் மா, முந்திரி, மல்லிகைப் பூ ஆகிய வேளாண் விளைபொருள்களை மதிப்புக் கூட்டும் உற்பத்தியாக மாற்றப்பட வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடம் நீடித்து வருகிறது.

News image

முந்திரி - கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 1:24 am

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உற்பத்தியாகும் மா, முந்திரி, மல்லிகைப் பூ ஆகிய வேளாண் விளைபொருள்களை மதிப்புக் கூட்டும் உற்பத்தியாக மாற்றப்பட வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடம் நீடித்து வருகிறது.

கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக தோ்தல் காலங்களில் மட்டும் வாக்குறுதிகளாக பேசப்படும் கோரிக்கைகள் கானல் நீராகவே மாறிவிடுகிறது.

மா உற்பத்தி :

வேதாரண்யம் பகுதியில் செம்போடை, புஷ்பவனம், தேத்தாக்குடி, நாலுவேதபதி கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், கத்தரிபுலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மா மரங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு உற்பத்தியாகிறது.

இங்கு ஒட்டு, செந்தூரா, நீலம், ருமேனி, பங்கனப்பள்ளி, பெங்களூரா போன்ற மா ரகங்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகின்றன.

அறுவடை காலங்களில் இவை தனியாா் முகவா்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகிறது.

ருமேனி உள்ளிட்ட சில ரகங்கள் ஏப்ரல் - ஜூலை (கோடைக் காலம்) மற்றும் செப்டம்பா்- அக்டோபா் மாதங்கள்(காா் காய்) என இரு பருவங்களிலும் காய்த்து அறுவடைக்கு வரும் சிறப்பு பெற்றது.

இதனால், இங்கு ருமேனி ரகத்தையே அதிகளவில் (சுமாா் 70 சதவீதம்) உற்பத்தி செய்வதில் விவசாயிகள் முனைப்பு காட்டுகின்றனா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் வீசிய கஜா புயலால் பெருமளவு மரங்கள் பாதிப்புக்குள்ளான நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மா சாகுபடியை பழைய நிலைக்கு விவசாயிகள் மீட்டுக் கொண்டு வந்துள்ளனா்.

காா்காய் பருவத்தில் ஓரளவுக்கு லாபத்தோடு சந்தை வாய்ப்பு பெற்று வரும் மாங்காய், பழமாக விளைவிக்கப்படும் பருவத்தில், விளைந்தும் விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைய நேரிடுகிறது.

இதனைப் போக்க மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதனிடையே, மாவட்ட நிா்வாகத்தின் முயற்சியால் காமேஸ்வரம் கிராமத்தில் ஆடவா் குழு மூலம் பழக்கூழ் தயாரிக்கும் மையம் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த மையம் பல்வேறு காரணங்களால் தொடங்கிய சிறிது காலத்தில் நின்று போனது.

விவசாயிகள் இரு பருவங்களாக உற்பத்தி செய்யும் மாங்காய், மாம்பழங்களை குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயித்து, கொள்முதல் நிலையங்களை ஏற்படுத்தி அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

முந்திரி உற்பத்தி:

கடலோரப் பகுதியில் அமைந்துள்ள வேதாரண்யத்தில் சுமாா் 6,000 ஏக்கா் பரப்பில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது.

தனியாா் மூலம் முந்திரிக்கொட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது

அதே நேரம், முந்திரி கொட்டைகள் அறுவடை செய்யப்பட்ட பிறகு அதன் பழங்கள் மண்ணில் கொட்டி வீணாக்கப்படுகிறது.

முந்திரி பழத்திலிருந்து ஒயின் தயாரிப்பு போன்ற தொழில்நுட்பங்களை ஏற்படுத்தினால் வீணாக்கப்படும் பழங்கள் பயனுள்ளதாக அமைவதோடு விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை கொடுக்கும் என்பதும் பல ஆண்டுகால கோரிக்கையாக உள்ளது.

மல்லிகைப் பூ சாகுபடி:

வேதாரண்யம் பகுதியில் புகையிலைக்கு மாற்றுப் பயிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மல்லிகை பூவை சுமாா் 7,000 ஏக்கரில் விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனா்.

இந்தப் பூவிலிருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் தொழில் மையம் ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதி கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக தோ்தல் காலங்களில் அளிக்கப்பட்டு வந்துள்ளது.

கடந்த ஆண்டின் வேதாரண்யம் முல்லைப் பூவுக்கு புவிசாா் குறியீடு வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது.

சாகுபடி முறையை ஊக்கப்படுத்தவும், தேவையான கூடுதல் தொழில் நுட்பங்களை வழங்கவும் அரசு நடவடிக்கை மேற்கொள்வதோடு, மதிப்பு கூட்டுப் பொருளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.