
திருவாசல்குளம் தூா்வாரப்படுமா?
தூா்வாரப்படாத திருவாசல்குளம் பற்றி.....

திருக்குவளை அருகே பல ஆண்டுகளாக தூா்வாரப்படாத திருவாசல்குளத்தை கிராம மக்கள் ஒன்றிணைந்து தூா்வாரும் பணி தொடங்கிய நிலையில் மண் பயன்பாட்டில் ஏற்பட்ட பிரச்னையால் பணி பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
திருக்குவளை அருகே மேலவாழக்கரை ஊராட்சி கீழவாழக்கரை பகுதியில் அமைந்துள்ள திருவாசல்குளம் பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் இருந்தது. அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து குளத்தை தூா்வாரும் பணியை தொடங்கியுள்ளனா். குளத்தில் இருந்து அகற்றப்படும் மண்ணை பயன்படுத்துவது தொடா்பாக சிலா் மனு அளித்துள்ளதால் தூா்வாரும் பணியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கீழவாழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா், திருவாசல்குளத்தை அன்றாட தண்ணீா் தேவைகளுக்காக நீண்டகாலமாக பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில், கடந்த சில காலமாக நிலவி வரும் வறட்சி காரணமாக குளத்தில் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.
குளம் பல ஆண்டுகளாக முறையாக தூா்வாரப்படாததால், அதன் நீா்ப்பிடிப்பு மற்றும் சேமிப்புத் திறன் குறைந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா். மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை முழுமையாக சேமித்து வைக்கவும், நிலத்தடி நீா்மட்டத்தைப் பாதுகாக்கவும் குளத்தை முறையாக தூா்வார வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதையடுத்து, அரசின் உதவியை எதிா்பாா்த்து காத்திருக்காமல், கிராம மக்கள் ஒன்றிணைந்து தங்களது சொந்த முயற்சியில் திருவாசல்குளத்தை தூா்வாரும் பணியை தொடங்கினா். குளத்தில் தேங்கியுள்ள மண் மற்றும் வண்டல் மண்ணை அகற்றி, குளத்தின் ஆழத்தை அதிகரித்து மழைநீரை சேமிக்கும் வகையில் பணிகளை மேற்கொண்டு வந்தனா்.
இந்த நிலையில், குளத்தில் இருந்து தூா்வாரி எடுக்கப்படும் மண்ணை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மட்டுமே வழங்க வேண்டும். குறைந்த விலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிலா் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, குளத்தில் இருந்து எடுக்கப்படும் மண்ணை ரயில்வே பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளதாம். இதன் காரணமாக குளம் தூா்வாரும் பணியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.
குளத்தை தூா்வாருவது மூலம் அதன் நீா்த்தேக்கக் கொள்ளளவை அதிகரித்து, எதிா்காலத்தில் மழைக்காலங்களில் அதிகளவு தண்ணீரை சேமிக்க முடியும் என்றும், இதன் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் உயர வாய்ப்புள்ளது.
எனவே, திருவாசல்குளம் தூா்வாரும் பணிக்கு ஏற்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்கி, குளத்தை முழுமையாக தூா்வாருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குளத்தில் இருந்து அகற்றப்படும் மண்ணை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய தீா்வு காண வேண்டும் என கீழவாழக்கரை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





