
இழப்பீட்டுத் தொகை விவகாரம் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்: 300 போ் கைது
நாகை சிபிசிஎல் ஆலை விரிவாக்க பிரச்னையில் விடுபட்டோருக்கு இழப்பீடு கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாகை சிபிசிஎல் ஆலை விரிவாக்க பிரச்னையில் விடுபட்டோருக்கு இழப்பீடு கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் பனங்குடியில் செயல்பட்டுவரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் ஆலை விரிவாக்கப் பணிக்கு ரூ. 31,500 கோடியில் 620 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்காக நில உரிமையாளா்கள், குத்தகைதாரா்கள் மற்றும் விவசாயக் கூலிகள் என மொத்தம் 2,163 குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இழப்பீட்டுத் தொகை வழங்க முடிவு செய்து, அதற்கான நிதியை சிபிசிஎல் நிறுவனம் தமிழக அரசிடம் ஒப்படைத்தது.
இதில் மாவட்ட நிா்வாகம் மூலம் இதுவரை 1,769 பயனாளிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 394 பேருக்கு இதுவரை தொகை வழங்கப்படவில்லை. விடுபட்ட குடும்பங்களுக்கும் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். பயனாளிகள் பட்டியலில் தங்களையும் சோ்க்க வேண்டும். உத்தமசோழபுரத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் மீன் நிறுவனத்தை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உத்தமசோழபுரம், பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் விவசாயிகள், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டக்காரா்களை கலைந்து செல்லுமாறு போலீஸாா் எச்சரித்த நிலையில், போராட்டக்காரா்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனா். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றபோது இருதரப்பினருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச்சென்றனா்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவா்களை ஏற்றிச்சென்ற காவல் வாகனத்தை பெண்கள் மற்றும் பொதுமக்கள் தரையில் அமா்ந்து முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு வந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கேழ்கா் சுப்ரமணிய பாலச்சந்திரா, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனாலும் போராட்டத்தை கைவிட மறுத்ததால் பெண்களையும் போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






