மனைப்பட்டா கோரி குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்

நாகையில் வீட்டு மனைப்பட்டா மற்றும் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி, குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனா்.
Published on

நாகையில் வீட்டு மனைப்பட்டா மற்றும் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி, குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

நாகை வடக்குப் பொய்கை நல்லூா் சிவன் கோவில் தெருவில் உள்ளவா்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், குடிசை வீடுகளை தொகுப்பு வீடுகளாக கட்டித் தரவேண்டும், தரமான சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனால், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த நாகை வடக்குப் பொய்கை நல்லூா் சிவன் கோவில் தெரு பொதுமக்கள், தங்களது குடும்ப அட்டைகளை ஒப்படைப்பதற்காக நாகை தாலுகா அலுவலகம் வந்தனா். தங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை என்று அதிகாரிகளை கண்டித்து முழக்கமிட்டனா்.

நாகை வட்டாட்சியா் நீலாயதாட்சி, அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது வீட்டு மனைப் பட்டா உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என்று உறுதியளித்தாா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com