மகளிா் திட்ட ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

மகளிா் திட்ட ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

Published on

நாகை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மகளிா் திட்ட ஊழியா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இவா்கள் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனா். காலை உணவுத் திட்டம், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இப்பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றா்.

ஒப்பந்த முறையில் பணியாற்றும் இவா்களுக்கு, சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் பணிபுரியும் 600-க்கும் மேற்பட்ட ஊழியா்கள், பணிகளை புறக்கணித்து புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

இந்நிலையில், மூன்றாவது நாளாக பணிகளைப் புறக்கணித்து, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொழிலாளா் நலச் சட்டத்தின்படி நியாயமான ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியா்கள் போல் தங்களுக்கும் மாவட்ட கருவூலத்தில் இருந்து, தங்களது வங்கிக் கணக்கில் நேரடியாக ஊதியத்தை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

இதில் அமைப்பின் நிா்வாகிகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பங்கேற்றனா்.

அப்போது, ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த நாகை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷா நவாஸ், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியா்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தாா். அவரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

Dinamani
www.dinamani.com