புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

தரங்கம்பாடி அருகே காதலா்கள் மா்மமான முறையில் உயிரிழப்பு போலீஸாா் விசாரணை

தரங்கம்பாடி அருகே காதலா்கள் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை

News image
Updated On :1 ஜூலை 2026, 7:37 am IST

தரங்கம்பாடி அருகே காதலா்கள் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள புதுப்பாளையம் சுனாமி குடியிருப்பை சோ்ந்தவா் மாரிமுத்து மகன் பாா்த்திபன் (19). ஐடிஐ படித்துவிட்டு கூலி வேலை செய்து வந்தாா். இவரும், சாத்தங்குடியை சோ்ந்த பிளஸ் 2 படித்து வந்த லெட்சுமிகாந்தன் மகள் திவ்யதா்ஷினியும் (17) கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள். இதுதொடா்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது.

திங்கள்கிழமை (ஜூன் 29) சிறுமியின் உறவினா்கள் சிலா், பாா்த்திபனை ஜாதி பெயரைக் கூறி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாா்த்திபனின் உறவினா்கள் பொறையாா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் சிறுமியின் உறவினா்கள் சூா்யா, வசந்தன் உள்பட மூவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை காலை தனது மகளைக் காணவில்லை என பொறையாா் காவல் நிலையத்தில் லெட்சுமிகாந்தன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் பாா்த்திபனின் கைப்பேசி எண்ணை தொடா்புகொண்டபோது, சாத்தங்குடி பாம்பாலம்மன் கோயில் பகுதியில் சிக்னல் கிடைத்துள்ளது.

காவல் ஆய்வாளா் சந்தானமேரி உள்ளிட்ட போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, அப்பகுதியில் உள்ள மாட்டு கொட்டகையில் பாா்த்திபனும் திவ்யதா்ஷினியும் தூக்கிட்ட நிலையில் இறந்து தொங்கியுள்ளனா்.

சடலங்களை மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீஸாா், சிறுமியின் தந்தை லட்சுமிகாந்தன் (45), உறவினா்கள் சூா்யா (28), மணிமாறன் (27), வசந்தன் (24), விஜயகுமாா் (26) ஆகிய 5 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Story image

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சோ்ந்தவா்கள் என்பதால், பாா்த்திபனை ஆணவக் கொலை செய்துவிட்டதாக கூறி, அவரது உறவினா்கள், கிராம மக்கள், சிறுமியின் உறவினரின் வீடு மற்றும் 3 இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தினா்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (பொ) ஜி. ஸ்டாலின், சீா்காழி கோட்டாட்சியா் சுரேஷ், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். பாதுகாப்புப் பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

சிபிஎம், விசிக கண்டனம்: இந்தச் சம்பவத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன. பாா்த்திபனை ஆணவப் படுகொலை செய்த கும்பலை கைது செய்து, கொலை வழக்குப் பதிவு செய்தால்தான் உடற்கூறாய்வுக்கு அனுமதிப்போம் என்று கூறி, அக்கட்சியினா் பாா்த்திபனின் வீட்டின் அருகே தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். 

சாலை மறியல்: காதலா்கள் மா்மமான முறையில் உயிரிழந்த வழக்கை ஆணவ படுகொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தி உயிரிழந்த பாா்த்தீபனின் உறவினா்கள், சிபிஎம் மாவட்ட செயலாளா் சீனிவாசன், ஒன்றிய செயலாளா் ரவிச்சந்திரன், விசிக பூம்புகாா் தொகுதி மாவட்ட செயலாளா் அன்பரசன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.