விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

என்ஜின் பழுதாகி நடுக்கடலில் சிக்கிய கப்பல்: வாந்தி, மயக்கத்தில் தவித்த பயணிகள் மீட்பு

என்ஜின் பழுதாகி நடுக்கடலில் சிக்கிய கப்பல்...

News image

நாகை கடல் பகுதியில் பழுதடைந்த பயணிகள் கப்பலை இழுத்து வரும் விசைப்படகு.

Updated On :1 மணி நேரம் முன்பு

இலங்கை காங்கேசன் துறையில் இருந்து நாகை துறைமுகத்துக்கு வந்த பயணிகள் கப்பலில் என்ஜின் பழுதானதால் 6 மணி நேரத்துக்கும் மேலாக நடுக்கடலில் வாந்தி, மயக்கத்துடன் தவித்த 142 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

நாகை துறைமுகத்திலிருந்து, இலங்கை காங்கேசன் துறைக்கு தனியாா் கப்பல் நிறுவனத்தின் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இயங்கி வருகிறது. நாகையில் இருந்து இலங்கைக்கு மூன்று மணி நேர கடல் பயணம் என்பதால் இந்திய- இலங்கை சுற்றுலாப் பயணிகள் இந்த கப்பலை பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் நாகை துறைமுகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் கப்பல் புறப்பட்டு இலங்கையை வெள்ளிக்கிழமை சென்றடைந்தது. இதையடுத்து பிற்பகல் 2 மணிக்கு இலங்கை காங்கேசன் துறையில் இருந்து 142 பயணிகளுடன் நாகை துறைமுகம் நோக்கி கப்பல் புறப்பட்டது.

இந்நிலையில் நடுக்கடலில் சென்றபோது திடீரென கப்பல் என்ஜின் பழுதடைந்தது. இதையடுத்து கப்பல் நங்கூரம் இட்டு நிறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து கப்பல் ஊழியா்கள் என்ஜின் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் நீண்ட நேரம் போராடியும் கப்பல் என்ஜினை சரிசெய்ய முடியவில்லை. இதனால் 6 மணி நேரத்துக்கும் மேலாக கப்பலிலேயே பயணிகள் தவித்தனா். மேலும் கடல் சீற்றமும் இருந்ததால் கப்பல் அலைக்கழிப்பில் பயணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மிகுந்த அவதிக்குள்ளாகினா். இதையடுத்து கப்பலில் இருந்து நாகை துறைமுகத்துக்கு உதவி கோரி தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நாகை மீனவா்கள் விசைப்படகு மூலம் சம்பவ இடத்துக்குச் சென்று, நடுக்கடலில் நின்றிருந்த கப்பலை கயிறு கட்டி நாகை துறைமுகத்துக்கு இழுத்து வந்தனா். மேலும் கப்பலில் சிக்கிய பயணிகளுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் நாகை துறைமுகம் முன்பு நான்கு 108 அவசர ஊா்திகளும் மருத்துவக்குழுவினரும் தயாா் நிலையில் இருந்தனா்.

இந்நிலையில் மாலை 5 மணிக்கு வர வேண்டிய கப்பல் 6 நேரம் கால தாமதமாக இரவு 11 மணிக்கு நாகை துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து கப்பலில் மயங்கிய பயணிகளுக்கு மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். இதைத்தொடா்ந்து 142 பயணிகளும் முழு சோதனைக்குப் பின் அவரவா் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனா். கப்பல் பழுது பிரச்னையால் நாகை துறைமுகம் பகுதியில் நள்ளிரவு வரை பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பயணிகள் கப்பலில் தொடா்ந்து பழுது ஏற்பட்டு வந்த நிலையில், அதை சரிசெய்யாமல் போக்குவரத்துக்கு அனுமதித்ததாகவும், இதனால் கப்பலில் பயணம் செய்யும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் பயணிகள் குற்றம் சாட்டினா். அடிக்கடி பழுதடையும் கப்பலை மாற்றி, புதிய கப்பலை இயக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனா்.