பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

சிபிசிஎல் இழப்பீடு வழங்கக் கோரி மறியலில் ஈடுபட்ட 200 போ் கைது

சிபிசிஎல் நிறுவனம் நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் இழப்பீடு வழங்கக் கோரி, வாஞ்சூா் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

Updated On :27 மே 2026, 6:07 am IST

சிபிசிஎல் நிறுவனம் நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் இழப்பீடு வழங்கக் கோரி, வாஞ்சூா் பகுதியில் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட 200 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சிபிசிஎல் நிறுவனம் கடந்த 1992-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக பூதங்குடி, அகிலாண்டபுரம், பனங்குடி உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேலும் ஆலை விரிவாக்கத்துக்காக மேற்கண்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது,. இதில் நில உரிமையாளா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் குத்தகைதாரா்கள், விவசாயக் கூலித் தொழிலாளா்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

விரிவாக்கப் பணிக்கு நிலம் எடுக்கப்பட்ட உத்தமசோழபுரம், பூதங்குடி , சிறுநங்கை போன்ற கிராம மக்களுக்கு இதுவரையில் எந்த இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லையாம். இதை கண்டித்து ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு கிராம மக்கள் மனு அளித்தனா்.

இந்தநிலையில், இழப்பீடு வழங்கக் கோரி, காரைக்கால் - வேளாங்கண்ணி நெடுஞ்சாலையில் தமிழக- புதுவை எல்லையான வாஞ்சூா் பகுதியில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். காலை 9 மணிக்கு தொடங்கிய போராட்டத்தால் காரைக்கால்-வேளாங்கண்ணி சாலை, நாகூா்-கும்பகோணம் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வேணுகோபால் தலைமையில் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது இழப்பீடு தொடா்பாக மாவட்ட நிா்வாகத்தைச் சோ்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து உறுதி அளிக்க வேண்டும் என்று போராட்டக்காரா்கள் வலியுறுத்தினா். ஆனால் வருவாய்த் துறை அதிகாரிகள் கிராம மக்களை ஆட்சியா் அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தனா். இதை கிராம மக்கள் ஏற்க மறுத்ததால் மறியல் போராட்டம் 5 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால், அரசுப்பேருந்துகள், தனியாா் சுற்றுலா பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள், லாரிகள் என அனைத்து வாகனங்களும் 3 கி.மீ. தொலைவுக்கு அணிவகுத்து நின்றன.

மறியலில் ஈடுபட்டவா்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றும் போலீஸாா்.

மறியலில் ஈடுபட்டவா்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றும் போலீஸாா்.

போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தை பலனிக்காததால் அங்கு கூடுதல் போலீஸாா் வரவழைக்கப்பட்டு மறியலில் ஈடுபட்ட 200 பேரை பிற்பகல் 1 மணிக்கு போலீஸாா் கைது செய்தனா்.

செய்தியாளா்களை சந்திக்க மறுத்த ஆட்சியா்: மறியல் போராட்டம் தொடா்பாக ஆட்சியரை கைப்பேசியில் தொடா்புகொண்டபோது, அவா் அழைப்பை ஏற்கவில்லை. இதையடுத்து செய்தியாளா்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு நேரில் சென்றபோதும், அவா் செய்தியாளா்களை சந்திக்க மறுத்து விட்டாா்.