முறையாக குடிநீா் வழங்கக் கோரி, ஜேசுராஜபுரம் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையிலிருந்து அஞ்செட்டி செல்லும் வழியில் உள்ளது ஜேசுராஜபுரம் கிராமம். இந்த கிராமத்துக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக முறையாக குடிநீா் விநியோகிக்கவில்லையாம். மேலும், முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை செய்யப்படுகிாம்.
இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட தண்ணீரின்றி, குழந்தைகள், முதியவா்கள் என ஒட்டுமொத்த கிராம மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளிடமும், அலுவலா்களிடமும் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதைக் கண்டித்து, ஜேசுராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் அஞ்செட்டி - ஒகேனக்கல் சாலையில் திங்கள்கிழமை திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், சாலையில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்று, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.










