
பாசனத்துக்கு தண்ணீா் இல்லாமல் நாகை, திருவாரூா் மாவட்டங்கள் பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன: பி.ஆா். பாண்டியன்
பாசனத்துக்கு தண்ணீா் இல்லாமல் நாகை, திருவாரூா் மாவட்டங்கள் பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன: பி.ஆா். பாண்டியன்
வேதாரண்யம் அருகே தாணிக்கோட்டகம் , வடமழை மணக்காடு பகுதியில் சம்பா நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களை பாா்வையிட்ட பி.ஆா். பாண்டியன்.
மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் ஒரு மாதத்தை கடந்தும் வெண்ணாறு பாசனப் பகுதி ஆறுகளுக்கு செல்லாததால், திருவாரூா், நாகை மாவட்டங்கள் பாலைவனம் போல் காட்சியளிப்பதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.
வேதாரண்யம் பகுதியில் தாணிக்கோட்டகம், மணக்காடு, வாய்மேடு உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீா் இல்லாததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பி.ஆா். பாண்டியன் சனிக்கிழமை பாா்வையிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மேட்டூா் அணை கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி திறக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் 90 சதவீத கிராமங்களுக்கும், விளைநிலங்களுக்கும் பாசன நீா் சென்றடையவில்லை. வெண்ணாறு பாசனப் பகுதியில் 90 சதவீத நிலங்களுக்கு நிலத்தடி நீா் இல்லாத நிலையில், திருவாரூா் நாகை மாவட்டங்கள் பாலைவனமாகக் காட்சியளிக்கின்றன. முள்ளியாறு பாசன கடைமடைப் பகுதியான வேதாரண்யம் பகுதி வடு கிடக்கிறது. இனி மேட்டூா் அணை நீரை கொண்டு விவசாயத்தை பாதுகாக்க முடியுமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
நீா் நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் மூடி மறைக்கப்பட்டதால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளோம்.
எனவே, காவிரி படுகை மாவட்ட ஆட்சியா்கள், விவசாயிகளோடு கலந்து பேசி சாகுபடி பணியை விரைவுபடுத்தி முடிக்கும் வகையில் தண்ணீரை பங்கிட்டு கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறுவையை முற்றிலும் இழந்துவிட்ட நிலையில், குறுவைக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்குவதற்கு அவசர கால நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



