நீர்வரத்துப் பாதை ஆக்கிரமிப்பில் சிக்கிய குளங்கள்

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் நீர்வரத்துப் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பல குளங்கள் நீராதாரத்தை சேமிக்க முடியாத நிலையில் உள்ளன.

திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் நீர்வரத்துப் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பல குளங்கள் நீராதாரத்தை சேமிக்க முடியாத நிலையில் உள்ளன.

அரசு நிலங்களில் குடியிருப்போருக்கு குடிமனை பட்டா வழங்கும் போதும் நீர்நிலை  புறம்போக்கு நிலங்களை மட்டும் வகைமாற்றம் செய்து பட்டா வழங்க இன்னும் தடை நீடிக்கிறது. இருப்பினும், நீர்நிலைப் புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன.

இந்நிலையில், அரசின் சார்பில் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் நீர்நிலை  புறம்போக்கை ஆக்கிரமித்து ஊராட்சி ஒன்றியம் சார்பில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையமும் விதைவிடு குளத்தை சமன்படுத்தி கட்டப்பட்டுள்ளது  வேதனையான விஷயம்.

நகரில் உபரி நீர் வழிந்தோடும் கால்வாய்கள் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வரும் வழிகளை ஆக்கிரமித்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு உள்ளூர் அரசியல்வாதிகள், அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் 32 குளங்கள் உள்ளன.

நகரின் பிரதான இடத்தில் நகராட்சி எதிரே உள்ள  ராமர்மடக் குளம், அதன் பின்புறம் உள்ள நந்தவனக் குளம், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி செங்கமலத்தம்மாள் பெயரில் உள்ள குளம், உப்புக்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களுக்கும் தண்ணீர் வரும் வழிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால், அசுத்த நீர் தேங்கி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு லாயக்கற்ற நிலையிலும்   நகரின் சுகாதாரச் சீர்கேட்டுக்கும் காரணமாக இந்தக் குளங்கள் உள்ளன.

செங்கமலக்குளத்துக்கு வரும் வாய்க்காலை தனியார் பள்ளி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்ததால்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தில் பள்ளியே நீரால்  சூழ்ந்ததாகத் தெரிகிறது.

மேலும், இதுகுறித்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று, அந்த வழியைத் திறக்க முயற்சி மேற்கொண்டநிலையில், அவர் பணி மாறுதலில் சென்றதால் பழைய நிலையே தொடர்கிறது.

குளங்கள் பாழ்பட்டதால் நிலத்தடி நீராதாரம் குறைந்து கைப்பம்புகள் செயலிழந்து வருகின்றன. இந்தக் குளங்கள் பராமரிக்கப்படாததால் குடிநீருக்காக வழங்கப்படும் கொள்ளிடம் கூட்டுக் நீரையே குளிப்பதற்கும் உபயோகப்படுத்துகின்றனர். இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உள்ளது.

எனவே, பாரபட்சமின்றி அனைத்துக் குளங்களுக்கும் நீர்வரும் வழியில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளங்களைத் தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு  வரவேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com