பயணிகளை பரிதவிக்க வைக்கும் அரசு தொலைதூரப் பேருந்துகள்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டையில் கிழக்கு கடற்கரை சாலை வழியாகச் செல்லும் தொலைதூரப் பேருந்துகள் இரவு

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டையில் கிழக்கு கடற்கரை சாலை வழியாகச் செல்லும் தொலைதூரப் பேருந்துகள் இரவு நேரங்களில் பேருந்து நிலையத்துக்குள் வராமல் புறவழி பிரிவுச் சாலைகளில் இறக்கிவிட்டுச் செல்வதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சென்னையிலிருந்து தொண்டி, தூத்துக்குடி, சிதம்பரத்திலிருந்து ராமேசுவரம், சாயல்குடி, நாகூர்,  நாகை - வேளாங்கண்ணியிலிருந்து ராமநாதபுரம், ஏர்வாடி தர்ஹா, தூத்துக்குடி, திசையன்விளை, களியக்காவிளை, முதுகுளத்தூர், திருச்செந்தூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம், மார்த்தாண்டம், கொல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு    தொலைதூரப் பேருந்துகள் திருத்துறைப்பூண்டி வழியாகச் சென்று வருகின்றன. ஆனால், இதில் பல பேருந்துகள் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பேருந்து நிலையங்களுக்குள் வராமல் புறவழிச்சாலை  வழியாகவே செல்லும் நிலை தொடர்கிறது.

இந்தப் பேருந்துகள், பயணிகளை திருத்துறைப்பூண்டியில் வேதாரண்யம்  பிரிவு சாலை ரவுண்டானாவிலும், நாகை பிரிவு சாலையிலும்,  முத்துப்பேட்டை பயணிகளை ஆலங்காடு பிரிவு சாலை, மங்கலூர் பிரவு  சாலைகளில் நள்ளிரவில் இறக்கி விட்டு விட்டுச் செல்லும் நிலை தொடர்கிறது.

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் பயணிகள் புகார் தெரிவித்தால், திருநெல்வேலி, மதுரை, காரைக்குடி மண்டலங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவதால் எங்களால் ஏதும் செய்ய முடியாது எனக் கூறுகின்றனர். புறவழிச்சாலையில் பேருந்து நிறுத்தமும் கிடையாது. ஆட்டோ போன்ற வசதிகளும், மின்விளக்குகள்கூட இல்லாத நிலையில் இருளில் அச்சத்துடன் பெண்களும், முதியவர்களும் மூட்டை முடிச்சுகளுடன் நகருக்குள் வந்து சேர்வதற்குள் படும்பாடு சொல்லிமாளாது. இதே நிலை முத்துப்பேட்டையிலும் தொடர்கிறது.

முத்துப்பேட்டையில் ஒருமுறை புறவழிச்சாலையில் இறங்க முடியாது என மறுத்த முதியவரை, பேருந்துலேயே அழைத்துக்கொண்டு திருத்துறைப்பூண்டி நோக்கிச் சென்றனர். அவர், தன்னை பேருந்தில் கடத்திச் செல்கிறார்கள் என செல்லிடப்பேசியில் முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு கூறியவுடன், எடையூர் காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தி முதியவரை மீட்டதுடன் ஓட்டுநர், நடத்துநரை போலீஸார் எச்சரித்து அனுப்பிய சம்பவமும் நடைபெற்றது.

பெரும்பாலான தொலைதூரப் பேருந்துகள் காரைக்குடி, மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டை மண்டலங்களைச் சேர்ந்த பேருந்துகளாக உள்ளதால் பயணிகள் பெரும் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

சம்பந்தப்பட்ட புறவழிச்சாலைகளில் டிக்கெட் பரிசோதகர்களை  பணியமர்த்தி, பேருந்து நிலையங்களுக்குள் தொலைதூரப் பேருந்துகள் சென்று வருவதை உறுதிப்படுத்தினால் தான் தீபாவளி போன்ற பண்டிகைக்காலங்களில் சொந்த ஊருக்கு வருபவர்கள் பிரச்னைகளின்றி வர முடியும்.

எனவே, திருவாரூர் மாவட்ட ஆட்சியர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், சம்பந்தப்பட்ட மண்டலங்களின் மேலாண்மை  இயக்குநர்களைக் கொண்ட கூட்டுக் கூட்டம் நடத்தி இப் பிரச்னைக்கு  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின்  எதிர்பார்ப்பாக உள்ளது.

"நடவடிக்கை எடுக்கப்படும்'
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜிடம் கேட்டபோது, இதுகுறித்து தற்போதுதான் எனது கவனத்துக்கு வந்துள்ளது.

சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர், அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் ஆலோசித்து பொதுமக்கள் பாதிக்காதவாறு அனைத்து கோட்ட அரசு தொலைதூரப் பேருந்துகளும் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டையில் புறவழிச்சாலையில் செல்லாமல், பேருந்து நிலையங்களுக்குள் வந்து பயணிகளை ஏற்றி இறக்கிவிட்டுச் செல்ல உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

அரசுப் போக்குவரத்துக் கழக நாகப்பட்டினம் பொது மேலாளர்  கெளரிசங்கர் கூறியது:
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பிரிவு சாலைகளில் டிக்கெட் பரிசோதகர்களைக் கொண்டு திடீர் ஆய்வு நடத்தி, அனைத்து கோட்ட பேருந்துகளையும் திருத்துறைப்பூண்டி,  முத்துப்பேட்டை பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட கோட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்படும். இதையும் மீறி பேருந்து நிலையத்துக்குள் வராத பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com