திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வசிக்கும் மலைக்குறவர் இனத்தவர்களுக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்காததால் அவர்களது குழந்தைகளின் உயர்கல்வி கேள்விக்குறியாகி வருகிறது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்தைச் சேர்ந்த ஆயிப்பேட்டை, சூரியமங்கலம், தாதம்பேட்டை, திருநல்லூர், வடகிரிராஜபுரம், வாழக்கரைமேடு, காட்டுமன்னார்குடி வட்டத்தைச் சேர்ந்த திருநாரையூர், நந்திமங்கலம், உடையார்பாளையம் வட்டம், கோழிவாய்க்கால், கோடாரி கருப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மலைக்குறவர் இனத்தவர்கள், கடந்த 1984- ஆம் ஆண்டில் வாழ்வாதாரத்தைத் தேடி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வருவாய்க் கோட்டத்திற்குள்பட்ட சித்தமல்லி, தென்பரை, அக்கரைக்கோட்டகம், வடபாதிமங்கலம், மகாதேவப்பட்டனம், மாங்குடி, திருவாரூர் கோட்டத்திற்குள்பட்ட காட்டடூர், கொல்லுமாங்குடி, செல்லூர் ஆகிய பகுதிகளில் குடியேறினர். தற்போது 250 குடும்பங்கள் உள்ளன. இக்குடும்பங்களின் மக்கள் தொகை ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இவர்கள் சாதிச் சான்றிதழுக்காக கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர். அரசுத் துறையில் அளிக்கப்படும் மனுக்கள் கவனிப்பாரற்று கிடக்கின்றன என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
இதற்காக போராடி வரும் மன்னார்குடியை அடுத்த சித்தமல்லி ஊராட்சி சமத்துவபுரத்தில் வசிக்கும் மலைக்குறவர் இனத்தின் ஒருங்கிணைப்பாளராக செயல்படும் ம.ராஜேந்திரன் கூறியது:
1984-இல் சிதம்பரத்தை அடுத்த ஆயிப்பேட்டையிலிருந்து 30 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குடியேறி 33 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். நரி, உடும்பு, அணில் வேட்டையாடுவது, பன்றி வளர்ப்பது, ஈச்சங்கூடை கட்டுவது, கல் உடைப்பது போன்ற தொழில்களில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசு, தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.
வாக்காளர், குடும்ப, ஆதார் அட்டைகள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அரசு குடியிருப்பு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்து மலைக்குறவர் சாதிச் சான்றிதழ் மட்டும் இதுவரை வழங்கப்படவில்லை. 15 ஆண்டுகளாக இதற்காக அரசின் பல்வேறு மட்டத்தில் போராடியும் பலனில்லை என்றார்.
இப்பகுதியைச் சேர்ந்த ரா.ஆனந்தராஜ் கூறியது: நான் ஆரம்பக் கல்வியை சித்தமல்லியிலும், மேல்நிலைக் கல்வியை புத்தகரம் அரசுப் பள்ளியிலும் தொடர்ந்தேன். பிளஸ் 2 தேர்ச்சியை அடுத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு விண்ணப்பம் செய்தேன். சாதிச் சான்றிதழ் இல்லாமல் போனதால் அதில் சேரும் வாய்ப்பை இழந்தேன். இதையடுத்து சாதிச் சான்றிதழ் சமர்ப்பிப்பதாகக் கூறி பட்டுக்கோட்டை தனியார் பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். அவர்கள் அளித்த காலக்கெடு முடிந்த நிலையில் வெளியேற்றப்பட்டேன். இதனால் நான் கட்டிய பணத்தை இழந்தேன். இப்போது கூலி வேலைக்கு செல்கிறேன்.
என் சகோதரர் சிலம்பரசனும் பிளஸ்-2 முடித்தும், சாதிச் சான்றிதழ் இல்லாததால் உயர்கல்வி ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என்றார்.
இப்பகுதியைச் சேர்ந்த க.ஆரன் கூறியது: அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியரே எங்கள் சமூகத்துப் பிள்ளைகளுக்கு இந்து மலைக்குறவர் (எஸ்.டி) என பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிட்டு, பள்ளியில் சேர்த்துக் கொள்கின்றனர். கல்வி உதவித் தொகையும் பெற்று தருகின்றனர். ஆனால் அப்பள்ளியின் மாற்றுச் சான்றிதழை அரசு, தனியார் கல்லூரிகள் ஏற்பதில்லை என்றார்.
இச்சமூக மக்களை ஒருங்கிணைத்து போராடி வரும் மாவட்ட அமைப்புச்சாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் பி.ஏ.காந்தி கூறியது:
கடந்த 2012-இல் மன்னார்குடி கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டதை அடுத்து, கிராம நிர்வாக அலுவலர் மலைக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். இச்சமூகத்தில் உள்ள திருமணம், இறப்பு மற்ற குடும்ப நிகழ்ச்சிகளின் சடங்கு முறைகள், உணவுப் பழக்கம், பேச்சு மொழி, செய்யும் தொழில், குலதெய்வ வழிபாடு, பூர்வீகம் சிதம்பரம் மாவட்டம் என்பதற்கான ஆதாரம் உள்ளிட்டவற்றை திரட்டிச் சென்றார். ஆனால் இதுவரை எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.
33 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்துவரும் இவர்களை சிதம்பரம் மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்துக்கு சென்று, அங்கு மலைக்குறவர் (எஸ்.டி) சாதிச் சான்றிதழ் பெற்று வருமாறு இங்குள்ள வருவாய்த் துறையினர் அறிவுறுத்துகின்றனர். இது சாத்தியமானதா? அப்படி அங்கு சென்று சாதிச் சான்றிதழ் கேட்டால் தருவார்களா? என்பதைக் கூட அவர்கள் யோசிக்காமல் தட்டிக் கழிப்பது வேதனைக்குரியது.
தமிழக அரசு இவ்விஷயத்தில் காலம் தாழ்த்தாமல் மலைக்குறவர் இன மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தமிழக முதல்வர் கவனத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் கொண்டு செல்ல வேண்டும் என்றார். சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் போனதால் உயர்கல்வி கனவை இந்த இனத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தொலைத்துள்ளனர்.
சமூகத்தில் பின்தங்கிய மக்கள் கல்வி அறிவு பெறுவதன் மூலம் அவர்கள் அரசு வேலைக்கு செல்லுதல், அடுத்த தலைமுறை நாகரீகத்தை பெற்றிடுதல், சமூகத்தில் சமநிலை அந்தஸ்தை பெறுதல் போன்றவை வாய் வார்த்தைகளாக இன்றி நடைமுறைக்கு வருவதற்கு தடைக் கற்களாய் உள்ள பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பது இம்மக்களின் கோரிக்கையாகவும், ஆதங்கமாகவும் இருக்கிறது.
அரசின் பதிலை எதிர்நோக்கும் கோட்டாட்சியர்
மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் எஸ்.செல்வசுரபி கூறியது : மன்னார்குடி வருவாய்க் கோட்டம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து மலைக்குறவர் என சாதிப் பிரிவு இருந்ததாக ஆவணங்களில் ஏதும் இல்லை. வருவாய்க் கோட்டாட்சியரால் எந்த ஒரு சாதிச் சான்றையும் வழங்க இயலாது.
2005-ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் சட்டவிதிகளின் படி, வேறு மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டு, புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு சாதிச் சான்றிதழை அவர்களின் சொந்த மாவட்டத்தில் தான் ஒருவர் தனது நேரடி ரத்த உறவு உள்ளவரிடம் உள்ள சாதிச் சான்றிதழை பெற்று, அதை வருவாய்த்துறையில் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
வருவாய் அலுவலர்கள், எஸ்.சி, எஸ்டி துறையின் அதிகாரிகள் நேரில் பல கட்டங்களாக ஆய்வு செய்து அறிக்கை தந்த பிறகே சான்றிதழ் வழங்க வேண்டும். இருப்பினும், குழந்தைகளின் கல்வி தடைபடக் கூடாது என்பதால் தொடர்புடைய மக்களின் கோரிக்கை மனுக்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தமிழக அரசுக்கு அனுப்பி, அரசின் பதிலை எதிர்நோக்கியுள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சபரீசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் டி.கே. சிவக்குமார் பங்கேற்பு!

கருப்பு பக்கா கமர்சியல் திரைப்படம்: ஆர். ஜே. பாலாஜி

மசோதாவை எதிர்த்தால் மோசமான விளைவுகள்: மக்களவையில் மோடி பேச்சு

தேசியவாதம் பற்றி பாடம் எடுக்க தேவையில்லை! பாஜக எம்பிக்கு ஆ. ராசா பதிலடி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

