வ‌ங்​கி​க‌ள் அடி​யா‌ள்​களை வை‌த்து விவ​சா​யி​க​ளி​ட‌ம் கடனை வசூ‌ல் செ‌ய்​வது தடு‌க்​க‌ப்​ப​டுமா?

தமிழகத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்,  தனியார் வங்கிகள்,  தனியார் நிதி நிறுவனங்கள், தனியார் முகமைகள்  மூலமாக அடியாள்களை வைத்து

தமிழகத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்,  தனியார் வங்கிகள்,  தனியார் நிதி நிறுவனங்கள், தனியார் முகமைகள்  மூலமாக அடியாள்களை வைத்து வசூல் செய்யும் போக்கை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பாக திருவண்ணாமலை மாவட்டம், போந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பெற்ற கடனுக்காக, வங்கிக் கடன்  வசூல் பிரிவைச் சேர்ந்த குண்டர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டம், சோழகன்குடிகாட்டில் விவசாயி பாலா (எ) பாஸ்கரன், வங்கியில் பெற்ற கடனுக்காக காவல்துறையினர் மற்றும் குண்டர்களால் தாக்கப்பட்டு, டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டதும் தற்கொலை செய்துகொண்டார்.
இதேபோல்,  அரியலூர் மாவட்டம்,  ஒரத்தூரைச் சேர்ந்த விவசாயி ஒருவரும் வங்கியில் பெற்ற கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தின்போது, பணக்காரர்கள் மட்டுமன்றி ஏழை, சாமானிய மக்களும் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, நிதித்துறை இணை அமைச்சராக இருந்த ஜனார்த்தன பூஜாரி,  இந்திரா காந்தி கொண்டு வந்த 20 அம்சத் திட்டத்தின் ஒரு பகுதியாக வங்கியாளர்கள் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 6 ஆயிரம் வரை ஆடு, மாடுகள் வாங்கவும்,  சுயதொழில் தொடங்கவும் கடன் வழங்க உத்தரவிட்டார்.
இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஏழை மக்கள் பயனடைந்து பொருளாதார நிலையில் தன்னிறைவு அடைந்தனர் என்பது கண்கூடு.
ஆனால், இந்த நிலை நீண்ட நாள்கள் நீடிக்கவில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள்,  சிறு தொழில்முனைவோர் முறையான ஆவணங்களை அளித்தும் கடன்பெற முடியாத நிலை மீண்டும் ஏற்பட்டது.
இதனால் அதிக வட்டி வசூலிக்கும் வகையில் புற்றீசல்களாக தொடங்கப்பட்டுள்ள தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களை கடன்பெற நாடும் சூழ்நிலைக்கு விவசாயிகள், சிறு தொழில்முனைவோர் தள்ளப்பட்டனர்.
பல தனியார் நிதி நிறுவனங்கள் இருசக்கர வாகனங்கள், மினி லாரிகள்,  வாடகை கார்களை மொத்த தொகையில் 33 சதவீதம் முன்பணமாக பெற்றுக்கொண்டு வாகனக் கடன்களை வழங்குகின்றன. வாகனங்களின் அனைத்து ஆவணங்களும், ஒரு சாவியும் நிதி நிறுவனம் வசமே இருக்கும். கடன் தொகைக்கான இரண்டாவது தவணை தவறி கட்டாத நிலை ஏற்பட்டாலே குண்டர்களை வைத்து பறிமுதல் செய்து விடுகின்றனர்.
இந்த பணியில் தற்போது பெரும்பாலானவர்கள் காவல்துறையில் பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர்கள்,  குண்டர்களுடன் சேர்ந்து ஈடுபடும் நிலை அதிகரித்துள்ளது.
இப்பணியில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவதால் பறிமுதல் செய்யும்போது பிரச்னை ஏற்பட்டால் உள்ளூர் போலீஸாரை வைத்து சரி செய்து விடும் நிலை உள்ளது. இன்னும் சில தனியார் வங்கிகள் வீட்டுக் கடன் பெற்று தவணை செலுத்தாதவர்களிடம்
 வீட்டின் சந்தை மதிப்பைவிட குறைந்த தொகைக்கு பத்திரப் பதிவு செய்து விடுவார்கள்.
இதனால் வீட்டின் உரிமையாளர் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம், வங்கிக்கு தெரியாமல் வீட்டை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
மேலும், கந்து வட்டிக்காரர்கள் குறித்து காவல்துறையினர் எவ்வளவுதான் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கந்து வட்டித் தொழில் கொடி கட்டிப் பறக்கிறது.
தற்போது, காவல்துறையினர் பெரிய அளவில் கந்து வட்டித் தொழில் செய்பவர்களை கண்டுகொள்ளாமல், சிறிய அளவில் வட்டித் தொழில் செய்து வருபவர்களை மட்டுமே பெயரளவில் கைது செய்யும் நிலையும் தொடர்கிறது.
மறைந்த முன்னாள்  முதல்வர் ஜெயலலிதா 2003 -ஆம் ஆண்டில் இயற்றிய கந்து வட்டி சட்டம் முறைப்படி செயல்படுத்தப்பட்டாலே நிறைய பேர் கந்து வட்டி பிரச்னையில்இருந்து விடுபடும் நிலை ஏற்படும்.
இதுகுறித்து தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் கூறியது:
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை வசூலிக்க குண்டர்களை ஏவி விட்டு வசூலிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானதாகும்.
இந்தச் செயல்களால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை நீளும் சூழ்நிலை தொடர்கிறது. இதில் வெளி உலகுக்கு தெரியாமல் குடும்ப கெளரவம் கருதி பல விவசாயிகளின் இறப்பு தெரியாமலே மறைக்கப்பட்டு விடும் நிலையும் உள்ளது.
வாராக் கடன்களை பல நூறு கோடிகள் வைத்துள்ள தொழிலதிபர்களிடம் வசூலில் தீவிரத்தைக் காட்ட நினைக்காத வங்கி நிர்வாகம், ஏழை விவசாயிகளிடம் கெடுபிடி காட்டுவதை ஏற்க முடியாது.
இதே நிலை நீடித்தால் விவசாயிகளைத் திரட்டி வங்கி நிர்வாகத்துக்கு எதிராக தனியார் வசூல் முகவர்கள் என்ற பெயரில் செயல்படும் குண்டர்களை கிராமங்களில் நுழையவிடாமல் தடுக்கும் நிலை ஏற்படும் என்றார்.
அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியது : தமிழகத்தில்  ஈவு, இரக்கமின்றி விவசாயிகளிடம் கடன் வசூல் முறையில் பல கொடுமையான நடைமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.
வசூல் தீர்ப்பாயம் விதித்த தீர்ப்பின்படி கடன் தொகையை திரும்ப  செலுத்திய விவசாயிகளுக்கு ஆவணங்களை திரும்ப வழங்காமல் இழுத்தடிக்கும் நிலையும் உள்ளது.
கடன் தொகை செலுத்தியவர்களுக்கு அபராத வட்டி என்ற பெயரில் இன்னும் நிலுவை தொகை உள்ளதாக மிரட்டும் வங்கியாளர்கள் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com