நீடாமங்கலம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் ஏற்பட்டுள்ள நெற்பழ நோயைக் கட்டுப்படுத்த கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் விளக்கமளித்துள்ளனர்.
நீடாமங்கலம் வட்டாரத்துக்குள்பட்ட வடுவூர், புதுக்கோட்டை, சாத்தனூர் உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெல் வயல்களில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் மு. ராமசுப்ரமணியன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா.ரமேஷ் ஆகியோர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் அவர்கள் கூறியது:
ஒரு சில வயல்களில் நெற்பழ நோயின் தாக்குதல் தென்படுகிறது. இது மஞ்சள் கரிப்பூட்டை நோய் என்றும் அழைக்கப்படுகிறது. நெற்பயிர் பூக்கும் தருணத்திலும், கதிர் வெளிவரும் சமயத்திலும் இதன் தாக்குதல் மிகவும் அதிகமாகக் காணப்படும். காற்றில் 90 சதவீதத்துக்கு அதிகமான ஈரப்பதம் காணப்படுதல் 20 முதல் 25 டிகிரி செல்சியஸ் கொண்ட குறைந்த வெப்பநிலை மற்றும் இரவு நேர பனி மற்றும் வேகமான காற்று வீசும் போது ஒரு பயிரிலிருந்து மற்ற பயிர்களுக்கு பூசண வித்துக்கள் எளிதாகப் பரவும். பூக்கும் தருணம் மற்றும் கதிர் வெளிவரும் சமயத்தில் மழை பெய்வதும்; அப்போது நிலவும் மந்தமான சீதோஷ்ண நிலையும்; இந்நோய் தீவிரமாக பரவுவதற்கு காரணமாக அமைகின்றன.
அறிகுறிகள்: இதன் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒவ்வொரு நெல் கதிர் மணிகளும் பூசணத்தின் வித்துக்களால் நிரம்பி பளபளப்பான சிறிய பந்து போன்று காட்சியளிக்கும். இந்த பூஞ்சாணப் பந்தானது முதலில் ஆரஞ்சு நிறமாகவும், பிறகு மஞ்சளும் பச்சை நிறமும் அல்லது பச்சையும் கருப்பு நிறமுமாக மாறிக் காணப்படும். இதன் பாதிப்பினால் நெல் மணிகளில் மலட்டுத் தன்மை ஏற்படும். எனவே, இந்நோய் பாதிப்புக்குள்ளான வயல்களிலிருந்து நெல் மணிகளை விதைக்காகப் பயன்படுத்தக் கூடாது.
மேலாண்மை முறைகள்: வயல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் களைச் செடிகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மிகுதியான அளவில் தழைச்சத்து உரங்கள் அளித்தலைத் தவிர்த்தல் வேண்டும். இந்நோயானது காற்றின் மூலம் பரவுவதால் தாக்கப்பட்ட கதிர்களை வயலிலிருந்து அப்புறப்படுத்தி அழித்துவிட வேண்டும். குளிர் காலங்களில் நோய்த் தாக்குதலை முறையாக கண்காணிக்க வேண்டும்.
நெற்பழ நோய் தாக்குதலிலிருந்து நெற்பயிரைப் பாதுகாக்க கலப்பு கதிர் வெளிவரும்போது ஒரு முறையும், பால் பிடிக்கும் தருவாயில் ஒரு முறையும் ஓர் ஏக்கருக்கு புரோபிகோனசோல் 200 மி.லி. அல்லது காப்பர் ஹைட்ராக்ஸைடு 500 கிராம் இவற்றில் ஏதாவது ஒரு மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். இந்நோயின் தாக்குதல் அதிகமாக இருப்பின் 15 நாள்கள் கழித்து மீண்டும் தெளித்து இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். அறுவடைக்குப் பிறகு வைக்கோல் மற்றும் பயிர் தூர்களை அழித்துவிட வேண்டும். இதன் மூலம் அடுத்த சாகுபடியில் இவற்றின் தாக்குதல் இல்லாமல் நெற்பயிரைப் பாதுகாக்க முடியும் என்றனர்.
இந்த ஆய்வின்போது விவசாயிகள் பலரும் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரவு 10 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ஜெகதீசன், ஸ்வப்னில் சிங் அதிரடி: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி!

மதம் - மொழி - மரியவில்சன் - TVK அரசு | Perumal mani interview | CM Vijay | TVK | TN Assembly

அதிக மின்கட்டணம் தொடர்பான நடிகை வைஷாலி விடியோ: மின்சார வாரியம் விளக்கம்!
விடியோக்கள்


