திருவாரூர் அருகே கடம்பகுடி கிராமத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்றக் கோரி, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருவாரூர் அருகேயுள்ள கடம்பகுடி கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது என அப்பகுதி மக்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியதுடன், எண்ணெய் எடுக்கும் பணிகளையும் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்குழாய் அமைத்து மீண்டும் எண்ணெய் எடுக்கும் பணிகளை தொடங்கியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் பணிகளை தடுத்து நிறுத்த, மீண்டும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்புத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜிடம் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனுவில், கடம்பகுடி கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும்.
ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஜெயராமன் கூறியது: கடம்பகுடி கிராமத்தில் பசுமைத் தீர்ப்பாயத்தின் அனுமதியின்றி ஓஎன்ஜிசி நிறுவனம் பணிகளை மேற்கொண்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.