திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நகராட்சி வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டிருப்பதில் உள்ள குளறுபடிகளை சரி செய்யாமல் தேர்தல் நடத்தினால், உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெறும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முன்மாதிரி நகராட்சிகளில் மன்னார்குடி நகராட்சியும் ஒன்று. கடந்த 1969-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா தலைமையில் மன்னார்குடி நகராட்சி நூற்றாண்டு விழா கொண்டாடியது. கடந்த ஆண்டு 150-ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளது மன்னார்குடி நகராட்சி.
மிக நீண்ட காலத்துக்குப் பிறகு 1986-ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சியில் முதல்வராக எம்ஜிஆர் இருந்தபோது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், மன்னார்குடி நகராட்சியில் 28 வார்டுகள் இருந்தன. பின்னர், மக்கள் தொகைப் பெருக்கம், நகரப் பகுதி விரிவாக்கம் போன்ற காரணங்களால் வார்டு எண்ணிக்கை 33-ஆக அதிகரிக்கப்பட்டன.
தற்போது, தமிழகம் முழுவதும் உள்ளாட்சி வார்டுகள் மீண்டும் மறுவரையறை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, மன்னார்குடி நகராட்சியில் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி (ஆண்கள் 33,117, பெண்கள் 33,880 எனமொத்தம்-66,997) ஒரு வார்டுக்கு 2030 பேர் என நிர்ணயம் செய்து, புதிதாக வரையறை செய்த 33 வார்டுகளில் எந்தெந்த தெருக்கள், எந்த வார்டில் இடம் பெற்றுள்ளன என்ற பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், 20 வார்டுகளுக்கும் மேலாக முறையாக வரையறை செய்யவில்லை எனவும், வார்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவில்லை எனவும் பல்வேறு அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்து
வருகின்றனர்.
இதுகுறித்து, நகர் மன்ற முன்னாள் உறுப்பினர் கே.கே.பி. மனோகரன் கூறியது:
வினோபாஜி தெருவை மையப்படுத்தி, நடேசன்தெரு, மேலராஜவீதி, பராங்குசம் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 21-ஆவது வார்டு, தற்போது மறுவரையறையில் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, வினோபாஜி தெரு 9-ஆவது வார்டிலும், பராங்குசம் தெரு, நடேசன் தெரு ஆகியவை 18-ஆவது வார்டிலும், மேலராஜவீதி 12-ஆவது வார்டிலும் இணைக்கப்பட்டுள்ளன. இதில், வினோபாஜி தெருவை அருகில் உள்ள 12 அல்லது 18-ஆவது வார்டில் இணைக்காமல் 9-ஆவது வார்டில் இணைத்துள்ளது எப்படி சரியான மறுவரையறையாகும் என கேள்வி எழுப்பிய அவர், இது குறித்து நகராட்சி நிர்வாகத்தில் ஆட்சேபணை தெரிவித்தால், சம்பந்தப்பட்ட தெருவை மட்டும் அருகிலிருக்கும் வார்டுடன் இணைத்து கண்துடைப்பு நடவடிக்கை எடுக்கின்றனர்.
வார்டு வாரியாக களஆய்வு செய்யாமல், அலுவலக அறையில் அமர்ந்தபடி வார்டுகளைப் பிரித்ததால்தான் மன்னார்குடியில் மட்டும் அதிக அளவில் புகார் எழுந்துள்ளது.
இதனால்தான் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி அலுவலர்களின் செயல்பாட்டை ஆட்சியர் கண்டித்ததுடன், கூட்டத்தையும் பாதியிலேயே முடித்துவைத்து, முறையாக மறுவரையறை செய்யவும் உத்தரவு பிறப்பித்தார் என்றார்.
மூன்று முறை நகர் மன்ற உறுப்பினராக இருந்த ஆ. ஆனந்தராஜ் கூறியது:
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில வார்டுகள் மறுவரையறை செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளில் புதிய குடியிருப்புப் பகுதிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளும், அடுக்குமாடிகுடியிருப்புகளும் உருவாகியுள்ளன. மக்கள் தொகையும் அதிகரித்துள்ளன. இதன்படி, வார்டுகளை மறுவரையறை செய்திருந்தால், வார்டுகளின் எண்ணிக்கையை மூன்றிலிருந்து ஐந்து வரை அதிகரித்திருக்க வேண்டும்.
இதுகுறித்து கருத்துக்கேட்புக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடமும், தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையரிடமும் மனு அளித்துள்ளோம் என்றார்.
நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் ஜீ.வீ. ராமகிருஷ்ணன் கூறியது:
மறுவரையறை சம்பந்தமாக மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அரசியல் கட்சிகளுக்கோ, பொதுமக்களுக்கோ நகராட்சி நிர்வாகம் தெரியப்படுத்தவில்லை. தகவலறிந்து சென்றபோது, கூட்டம் முடிவடையும் நிலையில் இருந்தது.
குறிப்பிட்ட சில வார்டுகளில் தொடர்ந்து வெற்றி பெறுபவர்களுக்கும், எதிர் கட்சிகளுக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், கட்சி அரசியல் தலையீட்டின் காரணமாகவே வார்டு மறுவரையறையில் குளறுபடி நடைபெற்றுள்ளது என்றார்.
நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் கே. ஜீவானந்தம்:மறுவரையறை மூலம் வார்டுகளின் தொலைவை எளிமைப்படுத்துவார்கள் என்றால், 2-ஆவது வார்டில் ஏற்கெனவே இருக்கும் 6 தெருக்களுடன், புதிதாக 3-ஆவது வார்டிலிருந்து ஹரித்ராநதி மேற்கு, 22-ஆவது வார்டிலிருந்து ஹரித்ராநதி தெற்கு, 1-ஆவது வார்டிலிருந்து ராமநாதன் தெரு என மூன்று பகுதிகளையும் இணைத்து 9 தெருக்களாக அதிகப்படுத்தி, வார்டின் தொலைவையும் விரிவுப்படுத்தியுள்ளனர் என்றார்.
நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் ப. அய்யன்:
வட்ட வடிவில் இருந்த 27 -ஆவது வார்டை மறுவரையறை என்ற பெயரில், திசைக்கு ஒரு பகுதியாகப் பிரித்துப்போட்டுள்ளனர் என்றார்.
இப்புகார் குறித்து நகராட்சி ஆணையர் ஜி. இளங்கோவன் கூறியது:
தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலின்படிதான் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசியல் கட்சிகள் அளித்த ஆட்சேபணைகளில் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்தவை உடனடியாக சரி செய்யப்பட்டுள்ளன.
இதில் அரசியல் தலையீடோ, பாகுபாடோ எள்முனையளவும் கடைப்பிடிக்கப்படவில்லை. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, அறிக்கை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் அளித்த கோரிக்கை மனுவையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளோம். இறுதி முடிவை ஆணையம் எடுக்கும் என்றார்.
மறுவரையறையில் உள்ள குளறுபடி குறித்து மாவட்ட, நகராட்சி நிர்வாகம் மற்றும் மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, முறையாக நகராட்சி வார்டுகளைப் பிரித்து அறிவிப்பு வரவில்லை என்றால் பொதுமக்களையும் இணைத்துக்கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க இருப்பதாக அரசியல் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சபரீசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் டி.கே. சிவக்குமார் பங்கேற்பு!

கருப்பு பக்கா கமர்சியல் திரைப்படம்: ஆர். ஜே. பாலாஜி

மசோதாவை எதிர்த்தால் மோசமான விளைவுகள்: மக்களவையில் மோடி பேச்சு

தேசியவாதம் பற்றி பாடம் எடுக்க தேவையில்லை! பாஜக எம்பிக்கு ஆ. ராசா பதிலடி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

