
தென்னை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, அதன் மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: கஜா புயலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பெருமளவு உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எதிர்பாராத வகையில் பெருங்காற்றால் தென்னை, வாழை மரங்கள் மற்றும் ஏராளமான வீடுகள் பாதிப்படைந்துள்ளன.
கஜா புயலால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள், கரும்பு, முந்திரி பலா, எலுமிச்சை போன்ற மரங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. இவற்றை சரியாக கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி நீர் மற்றும் பருவமழை தொடர்ந்து கிடைப்பதில் பிரச்னை உள்ளதால், தென்னை சாகுபடியில் கடந்த 20 ஆண்டுகளாக விவசாயிகள் முழுமையாக ஈடுபட்டு, இந்தியாவிலேயே கேரளத்துக்கு நிகராக தென்னை வளர்ப்பு, உற்பத்தி செய்துள்ளனர். இவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் அரசின் ஆதரவான நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்த்து, காத்திருந்து அதை நம்பி வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த தென்னை விவசாயிகளுக்கு வருமானம் மற்றும் வாழ்க்கை முற்றிலுமாக சீர்குலைந்துவிட்டது. எனவே, சாய்ந்த தென்னை மரம் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். புயலுக்கு தப்பிப் பிழைத்த தென்னை மரங்களில் இன்னும் ஓராண்டுக்கு தேங்காய் விளைச்சலுக்கு சாத்தியமில்லை. எனவே, இந்த மரங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
இதேபோல், பாதிக்கப்பட்ட வாழை, கரும்பு உள்ளிட்ட மற்ற தோட்டப் பயிர்களுக்கும், நெற்பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தென்னை மரங்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்து பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் செயல்படுத்தவில்லை. ஆகவே, தென்னைக்கான காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





