புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

திருவாரூரில் அரசு வேளாண் கல்லூரி தொடங்கக் கோரிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லூரி, சட்டக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :3 செப்டம்பர் 2018, 1:24 am

திருவாரூர் மாவட்டத்தில் அரசு வேளாண் கல்லூரி, சட்டக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கோரிக்கை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜெ.பி.வீரபாண்டியன், எச்.மதுமதி, ஆர்.ராஜலெட்சுமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலச் செயலாளர் சீ. தினேஷ் தொடக்க உரையாற்றினார்.
சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் வை.சிவபுண்ணியம், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, இளைஞர் மன்ற மாவட்டச் செயலாளர் பெ.முருகேசு, நகரச் செயலாளர் எம்.ஏ.மாரியப்பன்  ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஒருங்கிணைப்பாளர் துரை.அருள்ராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் சு.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்: மாணவர்களின் கல்விக் கடனை வசூலிக்கும் அதிகாரத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளதை ரத்து செய்ய வேண்டும்.  கேரளத்தைப்போல் தமிழகத்திலும் புதிய கல்விக் கடன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொடக்கக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அனைவருக்கும் தாய்மொழியில்  கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதிகளை சுகாதார வசதிகளோடு பராமரிக்க வேண்டும். விடுதியின் உணவு மானியத் தொகையை, தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உயர்த்தி அறிவிக்க வேண்டும்.
 திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி, சட்டக் கல்லூரி, பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும். மன்னார்குடியில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர், பேராசிரியர், ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டை தனியார் பள்ளிகளில் முழுமையாக அமல்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கென்று தனி பேருந்து வசதியை உருவாக்க வேண்டும். மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை காலம் தாழ்த்தாமல் அந்தந்த கல்வியாண்டின் தொடக்கத்திலேயே வழங்க வேண்டும். 
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையில் தமிழகத்துக்கு 50 சதவீத இடமும், அதில் திருவாரூர் மாவட்டத்துக்கு உள் ஒதுக்கீடாக 25 சதவீத இடமும் வழங்க வேண்டும். திருவாரூர் மத்திய பல்கலைக்கழக இலச்சினையை தமிழ் மொழியில் எழுத வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள்  இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, 37 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. அதன்படி, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்டத் தலைவராக ஜே.பி.வீரபாண்டியன், மாவட்ட செயலாளராக சு.பாலசுப்ரமணியன், மாவட்டப் பொருளாளராக ஆர்.நல்லசுகம் மற்றும் மாவட்ட துணைப் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.