குடிபோதையில் பள்ளி வேன் ஓட்டுநரை தாக்கியவர் கைது: சமூக ஆர்வலர்கள் கவலை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்ட தெரு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்ட தெரு விளக்குகள் பகல் நேரமும் ஒளிர்வதால் மின்சாரம் வீணாக்கப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பொதுவாக தெரு விளக்குகள் மாலை 6 முதல் காலை 6 மணி வரை ஒளிர வேண்டும்.  பகல் நேரத்தில் அணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கென உள்ளாட்சித் துறையில் தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும்,  அவர்களுக்கு சொற்ப ஊதியம் வழங்குவதால் பணியில் முழுகவனம் செலுத்துவதில்லை. இந்நிலை, கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கிறது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததே இதற்கு காரணம். கண்காணிக்க வேண்டிய உள்ளாட்சித் துறை அலுவலர்களும் பொறுப்பு இல்லாமல் இருந்து வருகின்றனர். 
இதுகுறித்து, அப்போதைய மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜிடம் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் ஊராட்சி வாரியாக ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கப்பட்டு, இதுகுறித்து தினமணியில் சிறப்பு செய்தியும் வெளியிடப்பட்டது.
இதையறிந்த மாவட்ட ஆட்சியர் சிறப்புக் கவனம் செலுத்தி, தெருவிளக்குகளை முறையாக அணைக்கவும், பல்வேறு இடங்களில் தானியங்கி கருவிகள் பொருத்த நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில், கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மின்கம்பங்களும், தெருவிளக்குகளும் சாய்ந்தன. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, அவசரகதியில் புதிய மின்கம்பங்கள் நிறுவப்பட்டு, மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டன. 
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து மின்கம்பங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தெருவிளக்குகள் பொருத்தி ஒளிரவிட்டுள்ளனர். ஆனால், இந்த மின்விளக்குகளை நாள்தோறும் மாலையில் ஒளிரவிட்டு, காலையில் அணைக்க எவ்வித ஏற்பாடுகளும் மின்வாரியத்தின் மூலம் செய்யப்படாத நிலையில், 24 மணி நேரமும் மின்விளக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. 
இதுகுறித்து, தற்போதைய திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் கவனத்துக்கு நேரடியாகவும், கட்செவி அஞ்சல் மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இன்றி மின்விளக்கு தொடர்ந்து 24 மணி நேரமும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது என்கின்றர் சமூக ஆர்வலர்கள். ஒரு யூனிட மின்சாரத்தை சேமித்தால் இரண்டு யூனிட் உற்பத்திக்கு சமம். ஆனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மின்விளக்குகள் இரவு பகலாக எரிவதால் மின்சாரம் வீணாகிறது. கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், மின்பயன்பாட்டாளர்கள் கூடுதலாக மின்சாரத்தை உபயோகப்படுத்திவரும் சூழ்நிலையிலும், நடைபெறவுள்ள மக்களவைத்  தேர்தல் காரணமாகவும் கூடுதல் மின்பயன்பாடு ஏற்படும் நிலையில், தெருவிளக்குகள் 24 மணி நேரமும் ஒளிர்வதை தடுத்து, மின் இழப்பைத் தவிர்க்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட காங்கிரஸ் வர்த்தகர் பிரிவுத் தலைவர் வி.டி. கருணாநிதி கூறியது: கடந்த 6 மாதத்துக்கும் மேலாகவே தெரு விளக்குகளை யாரும் அணைப்பதில்லை.  குரும்பல், மணலி, தண்டலைச்சேரி வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விளக்குகள் தொடர்ந்து 24 மணி நேரமும் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன என்றார். 
இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகரன் கூறியது: "கஜா புயலில் மின்கம்பங்கள் ஆயிரக்கணக்கில் சாய்ந்த நிலையில், புதிதாக மின்கம்பங்களை நட்டு மின்விநியோகம் அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்கப்பட்டது. 
இந்நிலையில், உள்ளாட்சித் துறை அலுவலர்கள் மின்வாரியத்தின் அனுமதி பெறாமலும், தகவல் தெரிவிக்காமலும் அனைத்து மின்கம்பங்களிலும் மின்விளக்குகளைப் பொருத்தி ஒளிரவிட்டுள்ளனர். 10 மின்கம்பங்களுக்கு  ஒரு கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியதன் பேரில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன'
என்றார். 
 அனைத்து தெரு விளக்குகளையும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் ஒளிரச் செய்ய, உள்ளாட்சி மற்றும் மின்துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த கோரிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com