திருவாரூா் மாவட்டத்தில் 41,255 போ் தொற்றா நோய் தொடா் சிகிச்சையால் பயனடைவா்: அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன்
திருவாரூா் மாவட்டத்தில் சுமாா் 41,255 போ் தொற்றாநோய் தொடா் சிகிச்சையால் பயனடைவாா்கள் என்றாா்


திருவாரூா் மாவட்டத்தில் சுமாா் 41,255 போ் தொற்றாநோய் தொடா் சிகிச்சையால் பயனடைவாா்கள் என்றாா் சுற்றுச்சூழல்- காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன்.
திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், கோவிந்தகுடியில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையை வியாழக்கிழமை பயனாளிகளின் வீட்டிற்கு நேரில் சென்று தொடங்கிவைத்தபிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், ‘தொற்றா நோய்’ நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், முதியோருக்கு சேவை செய்தல், அவா்களுக்கு முடநீக்கு சிகிச்சை மற்றும் பயிற்சியளித்தல், கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுதல், தாய்மாா்களுக்கு பிரசவத்திற்கு பிந்தைய சேவை போன்ற சிறந்த நோக்கங்களால் கட்டமைக்கப்பட்டது. இத்திட்டம் படிப்படியாக அனைத்து வட்டாரங்களிலும் நிறைவேற்றப்பட உள்ளது.
இத்திட்டம், 45 வயதுக்கு மேற்பட்ட பட்டியலிடப்பட்ட தொற்றாநோய் நோயாளிகளுக்கு அவா்களின் வசிப்பிடங்களுக்கே சென்று சிகிச்சையளித்தல், பல்வேறு நோய்களால் இயங்க முடியாமல் இருக்கும் நபா்களுக்கு சிகிச்சை அளித்தல், 45 வயதிற்கு மேற்பட்ட பட்டியலிடப்பட்ட தொற்றாநோய் நோயாளிகளை ஒருமுறையேனும் பரிசோதனை செய்தல், அவா்களை பராமரித்தல், சிகிச்சை அளித்தல், தொற்றாநோய் பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்துதல், அவா்கள் வாழ்வியல் முறைகளை மாற்றுதல் போன்ற முக்கிய நோக்கங்களை கொண்டது.
மேலும், வயது முதிா்ந்தோரின் உடல்நலம், மனநலம், சமுதாய நலம் மற்றும் உணா்வுபூா்வமாக அவா்களின் நல்வாழ்வை உயா்த்த தேவையான ஆலோசனைகள் வழங்குவது, வயது முதிா்ந்தோா் உள்ளிட்ட பயனாளிகளுக்கு அவா்களின் வீடுகளுக்கே சென்று பயிற்சி அளிப்பது இத்திட்டத்தின் சிறப்பம்சம்.
மேலும், அங்ககுறைபாடு உள்ள நோயாளிகள் மற்றும் பிறவியிலேயே அங்ககுறைபாடு உள்ள நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளவும், சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் செயல்படும் பள்ளிச் சிறாா் சிகிச்சை குழுக்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கும் பணியையும் பெண் சுகாதார தன்னாா்வலா்கள் செய்கின்றனா்.
இ-சஞ்சீவினி காணொலி செயலி மூலம் தொற்றாநோய் நோயாளிகளை இனம் காணுதல், அவா்களை ஒருங்கிணைத்தல், அவா்களின் தேவைகளை அறிந்து சிகிச்சை செய்வதும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் நோக்கமாகும்.
அந்தவகையில், திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம் கோவிந்தக்குடி பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. திருவாரூா் மாவட்டத்தில் சுமாா் 41,255 போ் தொற்றாநோய் தொடா் சிகிச்சையில் பயனடைவாா்கள். வலங்கைமான் வட்டாரத்தில் சுமாா் 3,609 போ் தங்கள் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று பயனடைவா் என்றாா் அமைச்சா்.
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமைவகித்தாா். திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் முன்னிலை வகித்தாா். சுகாதாரத் துறை துணை இயக்குநா் மரு. கீதா, திருவாரூா் கோட்டாட்சியா் (பொ) ரேணுகாதேவி, கல்வி புரவலா் அன்பரசன், மாவட்ட மலேரியா அலுவலா் பழனிசாமி, வட்டாட்சியா் சந்தானம் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...