புத்திரபாக்கியம் அருளும் நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

புத்திரபாக்கியம் அருளும் நீடாமங்கலம் சந்தானராமர் கோயில் மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் இன்று தொடங்கியது.
யாகசாலை பூஜைக்காக நீடாமங்கலம் வெண்ணாற்றிலிருந்து புனிதநீர் கொண்டு வரப்படும் காட்சி.
யாகசாலை பூஜைக்காக நீடாமங்கலம் வெண்ணாற்றிலிருந்து புனிதநீர் கொண்டு வரப்படும் காட்சி.

நீடாமங்கலம்: புத்திரபாக்கியம் அருளும் நீடாமங்கலம் சந்தானராமர் கோயில் மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் இன்று தொடங்கியது.

நீடாமங்கலம் சந்தானராமசுவாமி திருக்கோயில் மகாகும்பாபிஷேகம்  செப்டம்பர் 7 ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜைகள் இன்று திங்கள்கிழமை காலை தொடங்கியது.

தஞ்சையை ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்மரால் 1761-ல் நீடாமங்கலத்தில் சந்தானராமசுவாமி கோயில் கட்டப்பட்டது. கோயிலை கட்டிய மன்னர் திருக்கோயி்ல் முன்பு அழகிய குளத்தையும் அமைத்துத் தந்தார். மன்னர் தம்பதியருக்கு புத்திர பாக்கியம் அருளியதால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளதாக வரலாறு. 

நீடாமங்கலம் சந்தானராமர் கோயில் மகாகும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலையில் எழுந்தருளிய சீதா,லெட்சுமணர் சமேத சந்தானராமர்.
நீடாமங்கலம் சந்தானராமர் கோயில் மகாகும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலையில் எழுந்தருளிய சீதா,லெட்சுமணர் சமேத சந்தானராமர்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சதரால் பாடல்பெற்றது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ரோகிணி நட்சத்திரத்தன்று புத்திர சந்தானஹோமம் செய்து சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமரை வழிபட்டு குழந்தை வரம் பெறுவது வழக்கமாகவுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் கடந்த 2006  ஆம் ஆண்டு தொல்லியல் துறை நிதி மூலம் திருப்பணி நடைபெற்று மகாகும்பாபிஷேகம் நடந்தது.

யாகசாலை பூஜை.
யாகசாலை பூஜை.

மீண்டும் 16 வருடங்களுக்குப்பிறகு முழுக்க பக்தர்களின் உபய திருப்பணியாக நடைபெற்று வருகிறது. வரும் 7 ம்தேதி புதன்கிழமை காலை 10.30 முதல் 11 மணிக்குள் மகாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதனையொட்டி, வெண்ணாற்றிலிருந்து புனிதநீர் கொண்டுவரப்பட்டு யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டு முதல்கால மற்றும் 2 ஆம் கால  யாக பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாளை செப்டம்பர் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 3 மற்றும் 4 ம் கால பூஜைகளும், 7 ஆம்தேதி புதன்கிழமை 5 ம் கால யாகபூஜைகள் நிறைவுபெற்று மகாகும்பாபிஷேகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் நீடாமங்ஙலம் சந்தானராமர் சேவா டிரஸ்ட் அமைப்பினர் செய்துள்ளனர்.

ஆன்மீக மெய்யன்பர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்து ஶ்ரீராமன் திருவருளைப்பெற நீடாமங்கலம் ஶ்ரீசந்தானராமர் சேவாடிரஸ்ட் அமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com