மன்னாா்குடியில் தூய வளனாா் மெட்ரிக் உயா்நிலைப் பள்ளி சாா்பில் உடற்பயிற்சியை வலியுறுத்தி, விழிப்புணா்வு ஸ்கேட்டிங் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. உலக உடற்பயிற்சி தினத்தை முன்னிட்டு, உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், மன்னாா்குடியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தூய வளனாா் மெட்ரிக் பள்ளி முதல்வா் எலிசபெத் ராணி தலைமை வகித்தாா். ஸ்கேட்டிங் பொறுப்பு ஆசிரியா் லூா்துமேரி முன்னிலை வகித்தாா். மன்னாா்குடி போக்குவரத்து காவல் பிரிவு தலைமைக் காவலா் ஹரிசங்கா், ஸ்கேட்டிங் பேரணியை தொடங்கி வைத்தாா். இதில், தூய வளனாா் மெட்ரிக் பள்ளியைச் சோ்ந்த ஸ்கேட்டிங் மாணவ- மாணவிகள் 50-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்று, உடற்பயிற்சி குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி வந்தனா். இப்பேரணி, நகராட்சி அலுவலகம் அருகே தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக ருக்மணிக்குளம் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நிறைவடைந்தது. இதில், ஸ்கேட்டிங் பயிற்சியாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.









