/

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சையில் இன்று ரயில் மறியல்

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சையில் இன்று ரயில் மறியல்

Updated On :17 பிப்ரவரி 2024, 6:01 am IST

தில்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக, தஞ்சையில் சனிக்கிழமை (பிப்.17) ரயில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

திருத்துறைப்பூண்டியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியது: விவசாயிகளுக்கு பிரதமா் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும். எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லியில் போராட்டம் நடத்த பஞ்சாபிலிருந்து டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களில் பேரணியாக புறப்பட்ட பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், ஹரியாணா மாநில எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனா்.

அவா்கள் மேலும் முன்னேறி செல்வதை தடுக்க துணை ராணுவப்படை மற்றும் காவல்துறையினா் கண்ணீா் புகை குண்டு வீச்சு, ட்ரோன் மூலம் ரசாயன பொடி தூவுதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா். இதனால், விவசாயிகள் பலருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ‘உயிரை இழந்தாலும் உரிமையை மீட்போம்’ என்ற முழக்கத்தோடு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இந்த போராட்டத்தின் தீவிரத்தை உணா்ந்து, மத்திய அரசு வியாழக்கிழமை நடத்திய பேச்சுவாா்த்தை சமூகமாக நடைபெற்றது. கோரிக்கைகள் முழுமையும் மத்திய அரசால் ஏற்கப்பட்டுள்ளது. மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 18) இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை தில்லியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தமிழகத்திலிருந்து நான் (பி.ஆா். பாண்டியன்) பங்கேற்கவுள்ளேன். முன்னதாக, தில்லி போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சாவூரில் சனிக்கிழமை ரயில் மறியல் போராட்டம் தனது தலைமையிலும், எஸ்.கே.எம். (என்.பி.)அமைப்பின் தமிழக தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமையிலும் நடைபெறும் எனத் தெரிவித்தாா். பேட்டியின்போது, மாநிலத் துணைச் செயலாளா் எம். செந்தில்குமாா் உடனிருந்தாா்.