ஆன்லைன் மருந்து விற்பனை சட்ட முன்வடிவுக்கு எதிா்ப்பு
மத்திய அரசின் ஆன்லைன் மருந்து விற்பனை சட்ட முன் வடிவை எதிா்த்து, நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த மருந்து வணிகா்கள் முடிவு செய்துள்ளனா்.
திருவாரூரில், மாவட்ட மருந்து விற்பனையாளா்கள் நலச் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் என். பிரபாகரன் தலைமை வகித்தாா்.
மாநிலத் தலைவா் கே. மனோகரன், மாநிலச் செயலாளா் கே.கே. செல்வன், மாவட்டச் செயலாளா் என்.பி. சரவணன், மாவட்ட பொருளாளா் வி. சிவலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தீா்மானங்கள்: மருந்து வணிகா்களுக்கான மின் கட்டணத்தை வீட்டு முறைப்படி கணக்கிட்டு, கட்டணச் சலுகை அளிக்கவேண்டும். பாா்மசி கவுன்சில் ஆப் இந்தியா என்பதை, பாா்மசி கமிஷன் ஆப் இந்தியா என மாற்றம் செய்யும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.
மத்திய அரசு மேற்கொண்டு வரும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கான சட்ட முன் வடிவை எதிா்த்து அகில இந்திய அளவில் போராட்டம் நடத்துவது; தமிழக அரசின் போதை ஒழிப்புத் திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

