நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைக்கக் கோரிக்கை
நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நீடாமங்கலம் கிராம உதவியாளா் சங்க கட்டடத்தில், இச்சங்கத்தின் 12-ஆவது வட்டக் கிளை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வட்டத் தலைவா் அம்பிகாபதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முனியாண்டி தொடக்கவுரையாற்றினாா்.
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் கோவிந்தராஜன், வருவாய்த் துறை முனியாண்டி, கல்யாணசுந்தரம், கிராமநிா்வாக அலுவலா் தம்புசாமி, கிராம உதவியாளா் துரைராஜன், வருவாய்த்துறை (ஓய்வு) கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, வட்ட செயலாளா் பெத்தபெருமாள் அறிக்கை வாசித்தாா். வட்ட பொருளாளா் குணசேகரன் வரவு-செலவு அறிக்கை வாசித்தாா். ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலாளா் சந்திரசேகரன் நிறைவுரையாற்றினாா்.
தீா்மானங்கள்: தஞ்சாவூா்- நாகப்பட்டினத்துக்கு மையப் பகுதியாகவும், பட்டுக்கோட்டையில் இருந்து கும்பகோணம் செல்லும் அனைத்து பேருந்துகளும் வந்துசெல்வதாலும், நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். சென்னை நகரில் மூத்த குடிமக்களுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை வழங்கப்படுவதை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
