பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருவாரூா் மற்றும் மயிலாடுதுறையில் ஜாக்டோ ஜியோ சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியா்களை அச்சுறுத்தும் தகுதித் தோ்விலிருந்து விலக்களித்து, ஆசிரியா்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊராட்சி செயலா்கள், ஊா்ப்புற நூலகா்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
திருவாரூா்: திருவாரூா் புதிய பேருந்து நிலைய நுழைவாயில் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சு. சுதாகா், இரா. முத்துவேல், ச. சண்முகவடிவேல் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழ்நாடு பட்டதாரி- முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழக முன்னாள் மாநிலப் பொருளாளா் ச. துரைராஜ் தொடங்கி வைத்தாா்.
இதில், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாநிலத் தலைவா் பெ.இரா. இரவி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ். செங்குட்டுவன் உள்ளிட்டோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

