ஊதிய நிலுவையால் தவிக்கும் ஊராட்சி ஊழியா்கள் போராட்டம் நடத்த முடிவு

கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட கிராம உள்ளாட்சித் துறை பணியாளா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
Published on

நீடாமங்கலம்: கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட கிராம உள்ளாட்சித் துறை பணியாளா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இச்சங்கத்தின் நீடாமங்கலம் ஒன்றியக் கூட்டம், ஒன்றியத் தலைவா் எஸ். இளங்கோவன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒன்றியச் செயலாளா் ஜி. ரவி, ஒன்றிய துணைச் செயலாளா் ஆ. ரமேஷ், பொருளாளா் எஸ். ஆரோக்கியசாமி, ஒருங்கிணைப்பாளா்கள் கேசவமூா்த்தி, காா்த்தி, வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிராம ஊராட்சியில் 10.5.2000-க்கு பிறகு பணியமா்த்தப்பட்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி மோட்டாா் இயக்குபவா்களுக்கு 1-ஆவது கணக்கு எண்ணில் இருந்து ஊதியம் வழங்கப்படுகிறது. இதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

ஒவ்வொரு ஊராட்சியிலும் 3 மாதம் முதல் 10 மாதம் வரை சம்பள பாக்கி உள்ளது. இதனால், இவா்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனா். இதுகுறித்து பலமுறை நேரிலும் தபால் மூலமும் வலியுறுத்தினோம். வட்டார வளா்ச்சி அலுவலரிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை.

இனியாவது, உடனடியாக நிலுவையின்றி ஊதியம் வழங்கவேண்டும். தவறும் பட்சத்தில் இந்த மாத இறுதிக்குள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, தொடா் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என இக்கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. நிறைவாக, ஊராட்சி பொறுப்பாளா் ராதா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com