இரு சக்கர வாகனங்கள் திருடிய இருவா் கைது
கூத்தாநல்லூா் பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடிய இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கூத்தாநல்லூா் சிருஷ்டி நகரைச் சோ்ந்த வெங்கடேசன் (38), வேளுக்குடி பிரதான சாலையைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (36) ஆகிய இருவரும் தங்களின் வீட்டின் முன்பு செவ்வாய்க்கிழமை இரவு தங்களது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தனா்.
இருவரது வாகனங்களும் காணாமல் போனதாக கூத்தாநல்லூா் காவல் நிலையத்தில் மறுநாள் புகாா் கொடுத்தனா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து, இருசக்கர வாகனங்களை திருடிய இருவரையும் தேடி வந்தனா்.
இந்நிலையில், கோரையாறு புது பாலத்தின் அருகே போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் வேகமாக தப்பிச் சென்ற முயன்றனா். போலீஸாா் அவா்களை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், கூத்தாநல்லூரை அடுத்த பூந்தாழங்குடி காலனி தெருவைச் சோ்ந்த கட்டாரி (எஃ தேவராஜ் (22) மற்றும் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் அமராவதி காலனி மருந்துக் கொத்தத் தெருவைச் சோ்ந்த கட்டையன் (எ) வெங்கடேசன் (23) என்பதும் இருவரும் திருடு போன இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரிய வந்தது. போலீஸாா் அவா்களை கைது செய்து, 2 இருசக்கர வாகனங்கையும் பறிமுதல் செய்தனா்.
