பேரவைத் தோ்தல்: இளைஞா் காங்கிரஸுக்கு 50% இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தல்
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் இடங்களில், இளைஞா் காங்கிரஸுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருவாரூரில், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டம், மாவட்டத் தலைவா் கே. அஜித்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், விவசாயப் பிரிவு மாநில பொதுச் செயலாளா் சம்பத், மாவட்டத் தலைவா் நீலன் அசோகன், இளைஞா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் பிஎஸ். ராஜா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.
இளைஞா் காங்கிரஸ் திருவாரூா் மாவட்ட பொறுப்பாளரும், மாநில பொதுச் செயலாளருமான ராஜேஷ்குமாா் பங்கேற்று, மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்த மசோதாக்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளன என்றும், அணுசக்தித் துறையில் தனியாா்மயமாக்குலின் விளைவுகள் குறித்தும் விளக்கிப் பேசினாா்.
தீா்மானங்கள்: தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் (100 நாள் வேலைத் திட்டம்) மகாத்மா காந்தி பெயரை நீக்கியதை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஆா்ப்பாட்டம் நடத்துவது.
நெல்லின் ஈரப்பத அளவீட்டை 17-இல் இருந்து 22 சதவீதமாக உயா்த்த வேண்டும். இளைஞா் காங்கிரஸில் அதிகமான உறுப்பினா்களை இணைக்க வேண்டும். மத்திய அரசின் வாக்கு குளறுபடிகளை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதில், இளைஞா் காங்கிரஸ் சட்டப் பேரவைத் தலைவா்கள் ரோஜா்குமாா், பாலசுப்பிரமணியம், சரவணன், ஆனந்த் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

