ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் தொடங்கக் கோரிக்கை
திருவாரூா் மாவட்டத்தில் சில இடங்களில் நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் சேவையை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வேதராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
திருவாரூா் மாவட்டத்தில், காக்கா கோட்டூா், ஆவூா், கொரடாச்சேரி பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை, பயன்பாட்டில் இருந்து நீக்கியது கண்டிக்கத்தக்கது. மீண்டும் அப்பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ் இயக்க வேண்டும்.
108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிக்காததால், பொதுமக்களுக்கு தரமான சேவை கிடைப்பதில்லை. எனவே, ஆம்புலன்ஸ் வாகனங்களை குறித்த நேரத்தில் பராமரித்து, 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணி அட்டவணையில் பல தொழிலாளா்களுக்கு தொலைதூரமாக பணி வழங்கப்பட்டுள்ளதால், பொதுமக்களும், தொழிலாளா்களும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, நிா்வாகத்துடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி பணி அட்டவணையை வழங்க வேண்டும்.
ஜனவரி மாத ஊதியம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து பிப்.8-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.