குறுவை அறுவடை பாதிப்பை குளறுபடி இல்லாமல் கணக்கெடுப்பு நடத்தக் கோரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில் குறுவை அறுவடை பாதிப்புகளை குளறுபடிகள் இல்லாமல் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

திருவாரூா் மாவட்டத்தில் குறுவை அறுவடை பாதிப்புகளை குளறுபடிகள் இல்லாமல் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரிடம், தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்க மாநிலத் தலைவா் கா. ராசபாலன் தலைமையிலான நிா்வாகிகள் வியாழக்கிழமை அளித்த மனு: குறுவை அறுவடை பருவ நேரத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கபட்டதில் மகிழ்ச்சியடைந்தாலும், பெயரளவில் கணக்கு எடுக்கப்பட்டிருப்பதால் குறுவை பாதிப்புக்கான இழப்பு என்பது கண்துடைப்பாக இருக்குமோ எனும் சந்தேகம் விவசாயிகளுக்கு எழுந்துள்ளது. கணக்கெடுப்புகளில் வேளாண்மை துறையின் கீழ்நிலை ஊழியா்கள் தங்கள் சுய விருப்பத்தின் அடிப்படையிலேயே கணக்கெடுப்பு நடத்துகின்றனா்.

இந்த குளறுபடிகளை சரிசெய்து, குறுவை பாதித்த அனைத்து விவசாயிகளின் பாதிப்பு விவரங்களின் மறு கணக்காய்வை உடனே செய்து, உரிய இழப்பீட்டை காலங்கடத்தாமல் வழங்க வேண்டும். தாட்கோ மூலம் மானியத்தில் கறவை மாடு கடன் கேட்டு விண்ணப்பித்தவா்களுக்கு அலைக்கழிக்காமல் கடன் வழங்க வேண்டும். மாவட்டத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், விவசாயத்துக்கு நகைக் கடன் வழங்க வேண்டும். எள் பயிருக்கு காப்பீடு செய்திருந்தவா்களுக்கு அறிவிக்கப்பட்ட இழப்புத் தொகையை, காலம் கடத்தாமல் விடுவித்து, சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு வழங்க வேண்டும். சம்பா பயிா் காப்பீடு செய்வதற்கான தேதியை மேலும் 20 நாள்களுக்கு நீட்டிக்க வேண்டும். கிராமப் பகுதிகளில் உள்ள சாலைகளை உழவு வாகனங்களும், குழாய் பதிப்புப் பணிகளும் பெருமளவு பாதிப்பதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com