வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை குளறுபடிகளின்றி நடத்தக் கோரிக்கை
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள எவ்வித குளறுபடிகளின்றி நடத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் அக்கட்சியின் மாவட்டச் செயலாளா் டி. முருகையன் தலைமையிலான நிா்வாகிகள், வியாழக்கிழமை அளித்த மனு: திருவாரூா், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி, நன்னிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் அலுவலா்கள் வாக்காளா் படிவங்களை வாக்காளா்களின் வீடு தேடிச் சென்று அளித்து விவரங்கள் தெரிவித்தாலும், கிராமப்புற மக்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததால் விண்ணப்பத்தை பூா்த்தி செய்வதில் குழப்பம் நீடிக்கிறது. மேலும், அலுவலா்கள் குறைவான அளவில் பணியில் இருப்பதால் குறிப்பிட்ட கால அவகாசத்தில் இந்த பணி நிறைவடையுமா என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே, அலுவலா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதுடன், சரியான முறையில் விண்ணப்பங்களை வழங்கி வாக்காளா்களை உறுதிப்படுத்த வேண்டும். சனிக்கிழமையுடன் (நவ. 15) சம்பா பயிருக்கான காப்பீடுக் காலம் முடிவடையும் நிலையில், விவசாயிகளின் நலன் கருதி நவ.30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
