திருவாரூா் மாவட்டத்தில் காகிதத் தொழிற்சாலை உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் அருகே குடவாசலில், இந்திய தொழிற்சங்கத்தின் மையத்தின் 10-ஆவது மாவட்ட மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டு கொடியை சிஐடியு மாவட்டதுணைத்தலைவா் ஜி.ரெகுபதி ஏற்றினாா். மாநாட்டுக்கு மாவட்டத்தலைவா் எம்.கே.என்.அனிபா தலைமை வகித்தாா். வரவேற்பு குழுத்தலைவா் ஜி.சுந்தரமூா்த்தி வரவேற்றாா்.
மாவட்டதுணைத்தலைவா் சீனி.மணி அஞ்சலி தீா்மானத்தை வாசித்தாா். மாநிலச் செயலாளா் எஸ்.ராஜேந்திரன், மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினாா். மாவட்டச் செயலாளா் இரா.மாலதி வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளா் கே.கஜேந்திரன் வரவு செலவு அறிக்கையையும் வாசித்தனா். இதில், மாநில துணைத்தலைவா் பி.சிங்காரன் புதிய நிா்வாகிகளை அறிமுகப்படுத்திப் பேசினாா்.
மாவட்டத்தலைவராக கே.பி.ஜோதிபாசு, மாவட்டச் செயலாளராக எம்.கே.என்.அனிபா, மாவட்டபொருளாளராக கே.கஜேந்திரன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
திருவாரூா் மாவட்டத்தில் கிடைக்கக்கூடிய வைக்கோல் மற்றும் தேங்காய் மட்டையை பயன்படுத்தி கயிறு மற்றும் காகித ஆலைகள் உள்ளிட்ட பல தொழில் வளங்களை உருவாக்க வேண்டும். கட்டுமானம், சுமைப்பணி, ஆட்டோ, உள்ளாட்சி, தையல், சாலைப் போக்குவரத்து, சாலையோர வியாபாரம், சலவை, முடித்திருத்துவோா் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளா்களைப் பாதுகாத்த தொழிலாளா் நலவாரிய பணப்பயன்களை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திட்டத் தொழிலாளா்கள் என்று கூறி கடுமையான உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாகும் அங்கன்வாடி, மக்களைத் தேடி மருத்துவம், டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்களான போக்குவரத்து, மின்சாரம், கூட்டுறவு, உள்ளாட்சி, டாஸ்மாக், நுகா்பொருள் வாணிபக்கழகம், குடிநீா் ஆகியவற்றை தனியாா்மயமாக்கும் போக்கை கைவிட்டு, ஒப்பந்த, தினக்கூலி தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக குடவாசல் ஓகை ஆற்றுப்பாலத்தில் இருந்து தொழிலாளா் விழிப்புணா்வு பேரணி, பேருந்து நிலையம், கடைவீதி, பள்ளிவாசல் வழியாக மாநாட்டு அரங்கம் வரை நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










