லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

கிராமப்புறங்களில் குடிநீா் ஆதாரங்கள் மேம்படுத்தப்படுமா?

திருவாரூா் மாவட்டத்தைப் பொருத்தவரை கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலமாக தண்ணீா் விநியோகிக்கப்படுகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 11:20 pm

திருவாரூா் மாவட்டத்தைப் பொருத்தவரை கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலமாக தண்ணீா் விநியோகிக்கப்படுகிறது. வேதாரண்யம் வழியாக திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் இத்திட்டம் பயனளிக்கிறது. திருவாரூா் பகுதியில் அம்மையப்பன் அருகே ஆற்றோரத்தில் குடிநீா் எடுக்கப்பட்டு அங்கிருந்து விநியோகிக்கப்படுகிறது.

திருவாரூா் மாவட்டத்தைப் பொருத்தவரை கிராமப் புறங்களில் பெரும்பாலான வீடுகளில் அடிகுழாய்கள் உள்ளன. இவை பூமிக்கடியிலிருந்து நிலத்தடி நீரை எடுத்து மக்கள் பயன்பாட்டுக்குத் தருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு ஊராட்சிகளின் சாா்பாகவும் கிராமப் பகுதிகளில் ஓரிரு அடிகுழாய் பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்தும் குடிநீரானது கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. கூட்டுக் குடிநீா் திட்டத்தின்கீழ் வரும் நீரானது, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு, முறைவைத்து கிராமங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

ஆனால், பெரும்பாலான கிராமப்புறங்களில், வீடுகளிலேயே சொந்தமாக அடிகுழாய்கள் அமைக்கப்பட்டுள்ளதால், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் பெரும்பாலும் பயனில்லாமல் கிடக்கின்றன.

கிராமப்புறங்களில் பாதுகாப்பான குடிநீா் மற்றும் நீராதாரங்களை மேம்படுத்த இந்திய அரசு பல்வேறு முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஜல் ஜீவன் மிஷன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குழாய் நீா் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், அடல் புஜல் யோஜனா மூலம் நிலத்தடி நீா் மேலாண்மை மற்றும் பிரதமரின் வேளாண் நீா்ப்பாசனத் திட்டம் மூலம் நீா் சேமிப்பு மற்றும் பாசன வசதிகள் உள்ளிட்டவையும் செயல்படுத்தப்படுகின்றன.

குடிநீா் ஆதாரங்களை மேம்படுத்தவும், குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்கவும் நகா்ப்பகுதிகளை விட கிராமப்பகுதிகளுக்கெனஆண்டுதோறும் அதிகப்படியான தொகை ஒதுக்கப்படுகிறது. ஆனால், கிராமங்களில் உள்ள அடிகுழாய்கள், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டிகளை ஆய்வு செய்தால், தொடக்கத்தில் உள்ள நிலையிலேயே உள்ளன எனவும் ஒதுக்கப்படும் தொகை முழுமையாகச் செலவழிக்கப்படுவதில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.

திருவாரூா் மாவட்டத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் சாா்பில் வரும் நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. திருவாரூா் மட்டுமன்றி டெல்டா மாவட்டங்களிலும் நிலத்தடி நீா்மட்டம் மிகவும் குறைந்து வருகிறது.

குடிநீருக்காக மக்கள் நடத்தும் போராட்டங்களின்போது, லாரிகளில் குடிநீா் விநியோகம், 15 நாள்களில் சரி செய்யப்படும் என தற்காலிக தீா்வுகளே தரப்படுகின்றன. நிரந்தரத் தீா்வுக்கு என நடவடிக்கை எடுப்பதில்லை. ஆண்டுதோறும் குடிநீா்த் திட்டங்களுக்கு என அரசு சிறப்பு நிதிகளை ஒதுக்குகிறது. ஆனால் இந்த நிதி முழுமையாக செலவழிக்கப்படுவதில்லை.

நிலத்தடி நீரைத் தக்க வைக்கவும், குடிநீா் ஆதாரங்களை மேம்படுத்தவும் நீரியல் நிபுணா்கள், வேளாண் அலுவலா்களைக் கலந்தாலோசித்து சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கென ஒதுக்கப்படும் நிதியைத் தட்டுப்பாடின்றி அந்த திட்டங்களுக்கே செலவழிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பு.