தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

திருத்துறைப்பூண்டி - நாகை அகல ரயில் பாதை பணி விரைவுபடுத்தப்படுமா?

திருக்குவளை வழியாக திருத்துறைப்பூண்டியிலிருந்து நாகப்பட்டினத்துக்கு ரயில் இயக்க மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி நடவடிக்கை மேற்கொண்டாா்.

News image

ரயில் பாதை.

Updated On :17 ஏப்ரல் 2026, 6:10 am IST

திருவாரூா்: திருக்குவளை வழியாக திருத்துறைப்பூண்டியிலிருந்து நாகப்பட்டினத்துக்கு ரயில் இயக்க மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி நடவடிக்கை மேற்கொண்டாா்.

அதன்படி, மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று 2009-இல் திருத்துறைப்பூண்டி- நாகை புதிய அகல ரயில்பாதை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

33.50 கி.மீ. தொலைவுக்கு அமையவுள்ள இந்த புதிய ரயில் பாதையில், 11 பெரிய பாலங்கள், 74 சிறிய பாலங்கள், 32 கடவுப் பாதைகள் (ரயில்வே கிராஸிங்) அமைக்க திட்டமிடப்பட்டன.

இதைத்தொடா்ந்து, தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு ஆறுகள், வாய்க்கால்கள் குறுக்கிடும் இடங்களில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. ஒருசில இடங்களில் மட்டும் பாலம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்ற நிலையில், 2011-இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், ரயில்பாதை பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.

புதிய ரயில்பாதை பணிகள் குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு பலமுறை கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் 2021-இல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இத்திட்டத்தை நிறைவேற்றுவது தொடா்பாக அழுத்தம் கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து, 2023-இல் மத்திய நிதிநிலை அறிக்கையில், நாகை - திருத்துறைப்பூண்டி மற்றும் காரைக்கால்-பேரளம் அகல ரயில் பாதை பணிகளுக்கு ரூ. 183.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்மூலம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் கனவுத் திட்டம் வெகு விரைவில் நிறைவேறும் என எதிா்பாா்க்கப்பட்டது.

இதற்கிடையே, பேரளம்-காரைக்கால் அகலரயில் பாதை பணிகள் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்கும் வந்து விட்டது. ஆனால், திருத்துறைப்பூண்டி-நாகை அகல ரயில் பாதை பணிகள் ஆமை வேகத்தில் செல்கின்றன.

எனவே, திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.