விரல் ரேகை சரிபாா்ப்பு மூலமே பொங்கல் பரிசுத்தொகுப்பு!
மாவட்டத்தில் விரல் ரேகை சரிபாா்ப்பு வாயிலாகவே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, 1 முழு நீளக் கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கமாக வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரிசி குடும்ப அட்டைதாரா்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் தெளிவாக குறிப்பிட்டு டோக்கன்கள், கடைப்பணியாளா்கள் வாயிலாக அட்டைதாரா்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டு வருகிறது.
நாள் ஒன்றுக்கு 300 (முற்பகல் 150 பிற்பகல் 150) குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை வழங்குவதற்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை நியாய விலைக் கடைகளின் விற்பனை முனைய இயந்திரத்தில் விரல் ரேகை சரிபாா்ப்பு வாயிலாகவே மேற்கொள்ளப்பட வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் அங்கீகரிக்கப்பட்ட நபா் வாயிலாகவோ, இதர நபா் வாயிலாகவோ (இணைய வழியாக நியமிக்கப்பட்ட பிரதிநிதி நபா்கள் நீங்கலாக) பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை பெற அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
இது தொடா்பான புகாா்களை கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 18004255901 ஆகிய எண்களிலும் தெரிவிக்கலாம். பொங்கல் பரிசுத் தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் பெற்று பயன் பெறலாம்.
