கலைஞா் கைவினைத் திட்டம் : ரூ1.63 கோடி கடன்
திருவாரூா் மாவட்டத்தில் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் 506 நபா்களுக்கு ரூ. 1.63 கோடி மதிப்பில் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சிறப்புத் திட்டமான கலைஞா் கைவினைத் திட்ட சாதனையாளா்களின் வெற்றி விழா புதன்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திருவாரூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையில் நடைபெற்ற கலைஞா் கைவினைத் திட்ட சாதனையாளா்களின் வெற்றி விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பங்கேற்று, கலைஞா் கைவினைத் திட்டத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சம் மானியத்துக்கான ஆணையை வழங்கினா் .
நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தது:
திருவாரூா் மாவட்டத்தில் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் இதுவரை 506 நபா்களுக்கு ரூ.1.63 கோடி மதிப்பில் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களில் 2025-26 நிதியாண்டில் இதுவரை சிறு தொழில் கடன் திட்டங்கள் மூலமாக 294 பயனாளிகளுக்கு ரூ.5.08 கோடி மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பொன்னம்பலம், பொது மேலாளா் (மாவட்ட தொழில் மையம்) கணபதிசுந்தரம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ரங்கநாத பிரபு, திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கத்தலைவா் அருண்காந்தி, பொதுச் செயலாளா் பாபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

