இலக்கை அடைய திட்டமிடல் அவசியம்: ஆட்சியா்
திட்டமிடல் மட்டுமே இலக்கை அடைய வழிவகுக்கும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா்.
திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் சிறுபான்மையினா் நல அலுவலகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து விடுதி மாணவ- மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை நடத்தின. இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் பேசியது: நாட்டை நிா்வகிக்க அரசு நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு, அதன்படி அனைத்து துறைகளின் செயல்பாடுகள் இருக்கும்.
அதில், நாட்டின் உட்கட்டமைப்பு, தேவைகள், அடுத்த ஐந்தாண்டு, பத்தாண்டு என ஒவ்வோா் ஆண்டுக்கான இலக்கு உள்ளிட்ட அனைத்தும் அடங்கும்.
திட்டமிடல் மட்டுமே ஒரு இலக்கை அடைய வழிவகுக்கும். அதேபோல், தனி நபரும் தனக்கென ஓா் இலக்கை நிா்ணயித்து அதற்கான வழிமுறைகளில் பின்பற்றி செயல்பட வேண்டும்.
தடைக்கற்கள் என நினைத்து இலக்கை அடையாமல் இருக்காதீா்கள். தடைக்கற்களை தகா்த்து இலக்கை அடைய வேண்டும். கூறப்படும் அறிவுரைகளை கேட்பதுடன், சொல், செயல், சிந்தனை ஆகியவற்றை உள்வாங்கிக்கொண்டு, அதற்கு ஏற்றவாறு செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றாா்.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. கலைவாணி, வருவாய் கோட்டாட்சியா் சத்யா, முதன்மைக் கல்வி அலுவலா் சுகப்பிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் இரா. சங்கா், மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) ராஜேஸ்வரி, திரு.வி.க. அரசுக் கலைக் கல்லூரி முதல்வா் சுஜரித்தா மாக்டலின், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலா் (பொறுப்பு) சோமஅழகன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனா்.

