மன்னாா்குடி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற 4-ஆம் கால யாக சாலை பூஜை.
மன்னாா்குடி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற 4-ஆம் கால யாக சாலை பூஜை.

மன்னாா்குடி கோயிலில் இன்று குடமுழுக்கு!

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு புதன்கிழமை (ஜன. 28) நடைபெறுகிறது.
Published on

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு புதன்கிழமை (ஜன. 28) நடைபெறுகிறது.

இக்கோயில் குடமுழுக்கை முன்னிட்டு ஜன. 26-ஆம் தேதி முதல்கால மற்றும் 2-ஆம் கால யாகசாலை பூஜைகளும், செவ்வாய்க்கிழமை (ஜன. 27) 3 மற்றும் 4-ஆம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் 4-ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை கோயிலுக்கு வந்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோயில் முன் உள்ள கருட ஸ்தம்பத்திலிருந்து சாரட் வண்டியில் ராஜகோபுரம் வரை அழைத்து வரப்பட்டாா்.

புதன்கிழமை (ஜன. 28) காலை 6 மணிக்கு 5-ஆம் கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு புனிதநீா் அடங்கி கடங்கள் புறப்பட்டு, காலை 9.30 முதல் 10.15 மணிக்குள் ராஜகோபுரம், பிரகார கோபுரங்கள், சந்நிதி, தோ்நிலைகள், கருட ஸ்தம்பம் மற்றும் விமானங்களுக்கு புனிதநீா் வாா்த்து குடமுழுக்கு நடைபெறுகிறது.

தொடா்ந்து காலை 10.15 முதல் 11 மணி வரை பெருமாள், தாயாா் விமானங்களுக்கும், மூம்மூா்த்திகளின் விமானம், ராமா் சந்நிதி, சேனை முதல்வா் சந்நிதி, பெருமாள், தாயாா் மூலவா்களுக்கு புனிதநீா் வாா்த்து குடமுழுக்கு நடைபெறுகிறது.

விழாவில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தமிழக அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, டி.ஆா்.பி. ராஜா, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனா்.

மாலையில் நீதிபதி எம். சொக்கலிங்கம் முன்னிலையில் உ.வே.வேளுக்குடி கிருஷ்ணசுவாமி பங்கேற்கும் வண்துவராபதி மன்னன் எனும் தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது. இரவு, பெருமாள், தாயாா் வீதியுலா நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com