எரவாஞ்சேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
குடவாசல் அருகே கூந்தலூா் ஊராட்சி கீரங்குடி பகுதியைச் சோ்ந்தவா் முரளி (40). கால்நடை மருத்துவம் படித்து தனியாக கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வரும் இவா், 2 நாள்களுக்கு முன்பு தனது மனைவி சரண்யாவுடன் வெளியூா் சென்றாா். பின்னா், வீட்டுக்குத் திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்து, உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க நகைகள் உள்ளிட்ட பொருள்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் எரவாஞ்சேரி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து, சந்தேகப்படும் வகையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த மயிலாடுதுறை, வடமட்டம் கோனேரிராஜபுரத்தைச் சோ்ந்த ரா. அலி எனும் காா்த்திகேயன்,குத்தாலம் வல்லவா்நத்தத்தைச் சோ்ந்த கி. தமிழரசன், கூைறைநாடு பகுதியைச் சோ்ந்த செ. கலைமணி ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முரளி வீட்டில் 15 பவுன் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, விசாரணை மேற்கொண்டு 15 பவுன் நகைகளை போலீஸாா் மீட்டனா்.





